தாய்ப்பால் சுரப்பை கூட்டும் உணவு வகைகளை தேடி சாப்பிடுங்க உங்க செல்ல பிள்ளைக்காக! பாகம் 1

சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பால் சுரக்காது. இதற்கு எல்லாம் காரணம், ஊட்டச்சத்து குறைபாடு மட்டும் தான். இதனை நீங்கள் மிகவும் எளிமையான முறையில் சரி செய்ய முடியும். இதற்கு நீங்கள் வீட்டிலேயே, மிகவும் சத்துவாய்ந்த தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும் உணவுகளை சாப்பிட்டாலே போதுமானது.


பூண்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம். அதிகம் பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும்.

தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப்பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால், நீங்கள் கடலில் கிடைக்கும் பால்சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு போல் உண்டால் பால் சுரப்பு அதிகமாகும்.

முருங்கை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. முருங்கை கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

உங்களது உணவில் கீரைகளுக்கு முக்கிய இடம் இருக்க வேண்டியது அவசியம். கீரைகள் தாய்ப்பாலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே கீரைகளை மறக்காமல் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.