உரல் குத்து, அம்மி அரை! சென்னையை கலக்கிய கர்ப்பிணிகள் விழா!

நாகரீகம் என்ற பெயரில் பெண்கள், வீட்டு வேலை செய்யாமல் இருப்பதே சிசேரியன் முறை பிரசவங்கள் அதிகரித்ததற்குக் காரணம் என மகப்பேறு மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


அன்னையர் தினத்தையொட்டி சென்னை தனியார் விடுதி ஒன்றில் ப்ளும் கருத்தரித்தல் மையம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மருத்துவர்கள் இதனைத் தெரிவித்தனர். ஐ.டி., உள்ளிட்ட பணிகள் மற்றும் மாறி வரும் லைஃப் ஸ்டைல் முறைகளால், வீடுகளில் பெண்கள் சமைப்பதே அரிதாகிப் போனதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

மகப்பேறு மருத்துவர் கவிதா கவுதம், இயற்கை முறை பிரசவ பயிற்றுனர் ஜெயஶ்ரீ உள்ளிட்ட உளவியல் நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர். அப்போது, பேசிய அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன் வரையில், பெண்கள் அம்மிக் கல்லில் அரைத்தல், உரலில் உலக்கை வைத்து இடித்தல், ஆட்டுக்கல்லில் மாவு அரைத்தல் உள்ளிட்ட பணிகளை விரும்பிச் செய்தனர். 

அமர்ந்து இந்த வேலையைச் செய்யும்போது, அவர்களின் இடுப்பு எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இதனால், பிரசவத்தின்போது இடுப்பு எலும்புகள் விரிவடைந்து, சுகப்பிரசவம் ஆகும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், உலக்கையில் இடிக்கும்போது மூச்சுப்பயிற்சி செய்யப்பட்டு, அது தொடர்பான கோளாறுகள் பிரசவத்தின்போது நிகழாமல் தடுக்கப் படுவதாகவும் தெரிவித்தனர். குறைந்தபட்சம் பெண்கள் இத்தகைய வீட்டு வேலைகளை செய்து வந்தால், சுமார் 50 சதவீதம் அளவுக்கு சுகப்பிரசவ எண்ணிக்கையை உயர்த்த முடியும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் விதமாக இயற்கையான முறையில் சுகப்பிரசவம் மற்றும் வலியில்லாமல் நீருக்குள் பிரசவம் மேற்கொள்ளும் வாட்டர் பர்த் உள்ளிட்ட முறைகள் குறித்தும் மருத்துவர்கள் விளக்கமளித்தனர். கர்ப்ப கால சர்க்கரை நோய் வராமல் தவிர்க்கவும், வந்தால் தடுக்கவும், தாய்ப்பால் மறக்கடித்த பின்னர் குழந்தைகளுக்கு தர வேண்டிய சத்தான பாரம்பரிய உணவுகள் குறித்தும் விளக்கமளித்தனர்.

மாதவிடாய் சமயங்களில் இருக்க வேண்டிய சுத்தம், தாய்ப்பால் புகட்டுதல் குறித்தும் விழிப்புணர்வை உண்டாக்கினர். கர்ப்பிணிகள் மற்றும் தாயுடன், குழ்ந்தைகள் இணைந்த நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் கர்ப்பிணிகள் பங்கேற்று உரல் இடித்தல், அம்மியில் அரைத்தல், நடனம் ஆடுதல் என அசத்தினர்.