காஞ்சி பெரியவாவைவிட போராளி நந்தினி சூப்பர்! சிம்பிள் கல்யாணத்துக்கு மெகா பாராட்டு!

ஜாமீனில் வெளியே வந்த அடுத்த நாளே, தன்னுடைய குலதெய்வம் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார் நந்தினி.


யாருக்கும் அழைப்பு கொடுக்காமல், மிகவும் எளிமையாக திருமணம் செய்துகொண்ட நந்தினிக்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன. இதுகுறித்து இணையத்தில் சுழன்றுவரும் ஒரு பாராட்டுக் கடிதம் இது. படிச்சுப் பாருங்க, நந்தினியின் மீது மதிப்பு இன்னமும் உயர்ந்துவிடும்.

ஒரே ஒரு சின்ன வாட்ஸ் அப் செய்தி போதும்,- நீ அழைக்காமலே 50 தொலைகாட்சி சேனைகள் உன் திருமணத்தை நேரலை செய்ய ஓடோடி வந்திருப்பார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் குவிந்திருப்பார்கள். இந்த இடத்திற்கு சென்றால் நமக்கும் நல்ல விளம்பரம் என்றால், ஏராளமான வி.ஐ.பிக்களும், ஏன் வி.வி.ஐ.பிக்களேகூட வரிசைகட்டி வந்திருப்பார்கள்!

நான், நீ என்று விதவிதமான பரிசு பொருட்களை, மொய்ப்பணத்தை கொண்டு வந்து குவித்திருப்பார்கள். ஆனால், விளம்பரங்கள் முக்கியமல்ல, விழுமியங்களே முக்கியம் என்று வாழும் தெளிவு இன்று துறவிகளாகச் சொல்லப்படுபவர்களிடம் கூட இல்லை. ஏனெனில், காஞ்சி மகா பெரியவர் என்று அழைக்கப்பட்டவரின் பிறந்த நாள் விழாவிலே கூட அவர் தலை மீது தங்க காசுகளை அபிஷேகம் செய்கிறார்கள்.

சேனல்களில் முகத்தை காட்டி பேசுவதே பெரிய சேவை என கருதும் பல சமூக சேவகர்கள் மத்தியிலே, ஆயிரம் பேச்சுகளை விட செயல்பாடுகளே முக்கியம் என வாழ்வதன் மூலம் உணர்த்துகிறாய். இந்த எல்லா சிறப்புகளுக்கும் உன்னை வளர்த்தெடுத்த தந்தை ஆனந்தன் அவர்களும், உன்னை பெற்ற தாயுமே முக்கிய காரணம் என்பதால் அவர்களை கைகூப்பித் தொழுகிறேன்.

திருமண உறுதி ஏற்பில், ’’சொந்த நலன்களை விட சமுதாய நலன்களே முக்கியம்’’ என தந்தை சொல்ல நீங்கள் இருவரும் உறுதி ஏற்றதை கண்டு நெஞ்சம் விம்மியது! எதிர்காலம் குறித்த நம்பிக்கை பிறந்தது. இந்த சந்தோஷத்தை விட என்னைப் போன்றவர்களுக்கு வேறென்ன வேண்டும்?

வாழ்க மகளே!, வாழ்க மகனே!  நீவீர் பல்லாண்டு! பல்லாண்டு!