சாப்பிடும் போது பற்களில் சிக்கிய பாப்கான்..! தீயணைப்பு வீரர் உயிருக்கே உலை வைத்த பயங்கரம்! இதயத்தில் ஆப்பரேசன் செய்ய வேண்டிய நிலை! அதிர்ச்சி காரணம்!

லண்டன்: பற்களில் ஒட்டியிருந்த பாப்கார்னை எடுக்க முயன்று, ஆபத்தில் சிக்கிய தீயணைப்பு வீரர் ஒருவரின் கதை இதோ...


ஆடம் மார்ட்டின் (41 வயது) என்ற தீயணைப்பு வீரர், சில நாள் முன்பாக பாப்கார்ன் சாப்பிட்டுள்ளார். ஆனால், அதில் ஒரு சிறு துண்டு, தனது பல்லில் 3 நாளாக சிக்கிக் கொண்டதால், அவதி அடைந்தார். இதன்பேரில், பற்களுக்கு இடையே சிக்கியிருந்த பாப்கார்னை வெளியில் எடுக்க முயன்றார். இதற்காக, கைகளை விட்டு நோண்டிய அவர் பாப்கார்ன் சிக்காத அதிருப்தியில், பேனா முனையை பயன்படுத்தி குத்தியுள்ளார்.

ம்ஹூம், பாப்கார்ன் வெளியே வரவில்லை. இதையடுத்து, டூத் பிக் மற்றும் மின்கம்பி என வித விதமாக, கையில் கிடைத்த அனைத்தையும் எடுத்து வாய்க்குள் விட்டு பாப்கார்ன் துண்டை வெளியே எடுக்க முயன்றார். எதற்கும் அந்த பாப்கார்ன் அசையவில்லை. இதற்கிடையே, ஈறுகளில் விதவிதமான பொருட்களால் குத்தி சேதப்படுத்தியதில் ரத்தக்காயம் ஏற்பட்டு, அதன் மூலமாக, நோய்த்தொற்று ஏற்பட்டது. இது படிப்படியாக, அவரது ரத்த ஓட்டத்திற்கும் பரவியது.  

இந்த நோய்த்தொற்று இறுதியாக, எண்டோகார்டிடிஸ் எனும் இதய பாதிப்பை ஏற்படுத்தியது. உடனடியாக, மருத்துவமனை விரைந்த அவரை, இதய அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர். சாதாரண பாப்கார்ன்தானே என்ற எண்ணத்தில் அசட்டையாக வெளியே எடுக்க முயன்றவர், கடைசியாக இதயத்தையே பாதிக்கும் அளவுக்கு நோய்வாய்ப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.