ஈஷாவினரைப் பார்த்து பொது கூட்டங்கள் நடத்துபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். போக்குவரத்து காவல்துறை அதிகாரி வேண்டுகோள்.
ஈஷா தன்னார்வலர்களை பார்த்து திருந்துங்க! அரசியல் கட்சிகளுக்கு போலீஸ் அதிகாரி தரமான அட்வைஸ்!

சென்னையில் கடந்த வாரம் சத்குருவுடன் ஈஷா யோகா என்ற யோக வகுப்பு மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் நடைபெற்றது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடைபெற்ற வகுப்பில் 15000-க்கும் மேற்பட்டவர்கள் 80 நாடுகளிலிருந்து வந்து பங்கேற்றனர்.
இவ்வளவு மக்கள் ஒரே இடத்தில் கூடி யோகா கற்றுக்கொண்டது ஒருபுறம் எனில், அவர்கள் அங்கு வந்து செல்ல தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை சென்னை போக்குவரத்து போலீசார் செய்திருந்தனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த வகுப்பு முடிவடைந்தது. வகுப்பு முடிந்த பின்னர் அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஈஷா அமைப்பினர் தந்த ஒத்துழைப்பை வெகுவாக பாராட்டி பேசியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதில் அவர் கூறியிருப்பதாவது. இந்நிகழ்ச்சி எல்லாருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. இங்கு வந்திருந்த பங்கேற்பாளர்கள் அனைவரும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கினர், அதுதான் முக்கியம். நாங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்வதை புரிந்து அங்கீகாரம் கொடுத்து அவர்கள் இவ்வாறு நடந்துகொண்டது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இனிவரும் காலங்களில் அனைத்து கட்சியினர் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துபவர்கள் என எல்லாரும் ஈஷாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஒரு பெருங்கூட்டம் கூடும் இடங்களிலெல்லாம் எல்லாவித அசம்பாவிதங்களுக்கும் வாய்ப்பு இருக்கும். ஆனால் ஒழுங்கான முன் ஏற்பாடுகளும், மக்களின் ஒத்துழைப்பும் இருந்தால் மிக எளிமையாக அந்த சூழல் கையாளப்படும் என்பதற்கு இது சிறந்த உதாரணம். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் ஈஷா யோக மையம் சிறந்து விளங்குகிறது என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.