விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், காரை கிராமத்தில் 12.02.2020 அன்று தலித் இளைஞர் சக்திவேல் என்பவரை சாதியவெறியுடன் 20க்கும் மேற்பட்ட கும்பல் மரத்தில் கட்டி வைத்து அடித்து படுகொலை செய்துள்ளனர்.
விழுப்புரம் இளைஞர் படுகொலையில் போலீசும் துணை - நடவடிக்கை எடுக்க எடப்பாடிக்கு சிபிஎம் கடிதம்

இந்த கொலைச்சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இச்சம்பவத்திற்கு துணைபோன காவல்துறை அதிகாரிகளைக் கைதுசெய்ய வேண்டுமெனவும் முதலமைச்சருக்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடித விவரம்:
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுக்கா, காரை கிராமத்தை சார்ந்த சக்திவேல் என்கிற தலித் இளைஞர் 12.02.2020 அன்று இயற்கை உபாதை கழிக்கச்சென்றுள்ளார். அப்போது அந்த இடத்தில் இருந்த ராஜா மற்றும் அவரது மனைவி கௌரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் தவறாக புரிந்து கொண்டும், சாதி வெறியுடன் சக்திவேலை மரத்தில் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். பிறகு அங்கிருந்த கும்பல் அவர்களது செல்போனை கொடுத்து சக்திவேலிடம் அவரது குடும்பத்தாரையும் வரச்சொல்லியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சக்திவேலின் தகப்பனார், சகோதரி மற்றும் குடும்பத்தினரையும் இந்த கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அறிந்து வந்த பெரியதச்சூர் காவல்நிலைய ஆய்வாளர் திரு. வினோத்ராஜ் மற்றும் காவலர்கள், மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்பட்ட சக்திவேலை காப்பாற்றவோ, அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சக்திவேலின் தந்தையை அடித்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இந்நிலையில் சக்திவேலை மீட்ட அவரது தந்தை, தனது மகனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது செல்லும் வழியிலேயே சக்திவேல் உயிரிழந்துள்ளார். இந்த படுகொலை சாதிய வன்மத்துடன் நடந்துள்ளது என்பது தெளிவாக அறிய முடிகிறது.
இறந்து போன சக்திவேலுவின் ஆண்குறி கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மேலும் மார்பு எலும்புகள் நொறுங்கியுள்ளதாகவும் தெரிகிறது. தமிழ்நாட்டில் பட்ட பகலில் காவல்துறையினர் முன்னிலையிலேயே அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் பெரும் தலைகுனிவை ஏற்படுத்துவதாகும். மேலும் இக்கொடூரமான தாக்குதல் நடக்கும் போது காவல்துறை வேடிக்கை பார்த்தது, நடவடிக்கை எடுக்காதது காவல்துறைக்கு தீராத களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலையில் 20 பேர் சம்பந்தப்பட்டுள்ள நிலையில் 9 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளது போதுமானதல்ல. மீதமுள்ளவர்களை தப்ப வைப்பதும் சரியல்ல. எனவே இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல பெரியதச்சூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் வினோத்ராஜ் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் அவர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே, பெரியதச்சூர் காவல்நிலைய துணை ஆய்வாளர் வினோத்ராஜ் மற்றும் அவருடன் சென்ற காவலர்கள் அனைவரையும் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் படுகொலை செய்யப்பட்ட சக்திவேல் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்று பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.