தொகுதி ஒதுக்கீடு! கேப்டனிடம் பணிந்த அய்யா! பிரேமலதாவிடம் பாமக நடத்திய பேரம்!

அரசியல் விசித்திரமானது. காரியம் ஆகவேண்டும் என்றால் காலைப் பிடிப்பார்கள். காரியம் முடிந்துவிட்டால் தலையில் ஏறி மிதிப்பார்கள் என்பதற்கு உதாரணமாக விஜயகாந்தை வீடுதேடிப் போய் சந்தித்து திரும்பியிருக்கிறார் ராமதாஸ்.


சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்குச் சென்று ராமதாஸ் சமாதானம் பேச இருப்பதாக நேற்றே செய்தி பரவியது. ஆனால், ராகுல் காந்தி மீட்டிங் மீடியாவில் செம போடு போட்டதால், தன்னுடைய சந்திப்பை ஒரு நாள் தள்ளிவைத்தார் ராமதாஸ்.

இன்று வேறு எந்த பரபரப்புச் செய்தியும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு அன்புமணியை அழைத்துக்கொண்டு விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றார் ராமதாஸ். அங்கே ஏற்கெனவே திட்டமிட்டபடி அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் உட்கார்ந்து இருந்தார்கள்.

விஜயகாந்தை சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பிய ராமதாஸ்,  உடல் நலம் குறித்து விசாரிக்கத்தான் வந்தேன், சந்திப்பு நல்லபடியாக முடிந்தது என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

உண்மையில் என்னதான் நடந்தது என்று விஜயகாந்த் கட்சியின் நிர்வாகிகள் சிலரிடம் கேட்டோம். எங்களை தொடர்ந்து தோற்கடித்தது பாட்டாளி மக்கள் கட்சிதான். எங்கள் கட்சி வளர்ந்துவிடக் கூடாது என்று  ஏகப்பட்ட உள்குத்து வேலை செய்திருக்கிறார்கள். இப்போது கூட்டணி விவகாரத்தில் முதலிலேயே அ.தி.மு.க.வுக்குப் போய் ஏழு தொகுதிகளை பெற்றுக்கொண்டதுதான் எங்களுக்கு பெரிய வருத்தம்.

இப்போது எந்தெந்த தொகுதி என்பதை  முதலில் நாங்கள்தான் முடிவு செய்து எடுத்துக்கொள்வோம் என்று அ.தி.மு.க. கூட்டணியில் சொன்னோம். அதனை ராமதாஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் தொகுதிப் பங்கீடு இன்னமும் முடிவடையாமல் இருக்கிறது. இந்த விஷயத்தில் எங்களை சமாதானப்படுத்தத்தான் ராமதாஸ் வந்தார். ஒருசில தொகுதிகளை விட்டுக்கொடுக்க ராமதாஸ் முன்வருவதாகச் சொன்னார். அதனை பிரேமலதா ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்று சொன்னார். அதனால் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. அ.தி.மு.க. அமைச்சர்களும் பேச்சுவார்த்தைக்குத்தான் வந்தார்கள். இன்று பேச்சுவார்த்தை நல்லபடியாக முடிந்திருந்தால் அ.தி.மு.க. அமைச்சர்களும் தொகுதி விவகாரத்தில் திருப்தி அடைந்திருப்பார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எங்கள் கட்சி சொல்வதை கேட்பதைத் தவிர ராமதாஸ்க்கு வேறு வழியே இல்லை என்று சொன்னார்கள்.

ஆரம்பமே அமர்க்களமா இருக்குதே...