வேளாண் மண்டலம் - இராமதாசுக்கும் பா.ம.க.வினரே நடத்தும் பாராட்டு விழா!

காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக தமிழ்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதற்காகப் பாடுபட்டதாகக் கூறி, பா.ம.க. நிறுவனர் இராமதாசுக்கு அக்கட்சியினர் சார்பிலேயே பாராட்டு விழா நடத்தப்படுகிறது.


நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் வரும் 14ஆம் தேதியன்று நடத்தப்படும் பாராட்டு விழாவில், அக்கட்சியின் தலைவர் கோ.க. மணி முக்கியமாகப் பங்கேற்கிறார். இது குறித்து பா.ம.க. இளைஞர் அணியின் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் பாதுகாப்பு மண்டலம் எனும் கோரிக்கைக்காகவும் அதை நிறைவேற்ற வலியுறுத்தியும் பா.ம.க. என்னென்ன செயற்பாடுகளை மேற்கொண்டது என்பதை பட்டியலிட்டுள்ளார். 

அந்த அறிக்கை விவரம்:

காவிரிப் பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் வலியுறுத்திய அரசியல் கட்சித் தலைவர் இராமதாசுதான். காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன், முந்தைய திமுக அரசு ஒப்பந்தம் செய்து காவிரி பாசன மாவட்ட மக்களுக்கு பெருந்துரோகம் இழைத்தது.

அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து உழவர்களும், பொதுமக்களும் போராடியதாலும், அப்போது ஆட்சியிலிருந்து ஜெயலலிதா தலைமையிலான அரசு மக்களின் உணர்வுகளை மதித்து, குஜராத் நிறுவனத்தை தமிழகத்திற்குள் அனுமதிக்காததாலும், மு.க.ஸ்டாலின் செய்து கொண்ட மீத்தேன் எரிவாயு ஒப்பந்தம் 2014-ஆம் ஆண்டில் காலாவதி ஆனது. அதனால், காவிரி பாசன மாவட்ட உழவர்கள் நிம்மதியடைந்த நிலையில், பாறை எரிவாயு திட்டங்களை செயல்படுத்த ஓ.என்.ஜி.சி நிறுவனம் முடிவு செய்தது. 

மீத்தேன் திட்டத்தை விட பாறை எரிவாயு திட்டம் மிகவும் ஆபத்தானது என்பதால், அதை எதிர்த்து இராமதாசுதான் மாபெரும் போராட்டங்களை அறிவித்து, முன்னெடுத்தார். 2016 சட்டப்பேரவை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இதற்கான வாக்குறுதியும் அளிக்கப்பட்டிருந்தது. அத்தேர்தலில் வேறு எந்த கட்சியும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் வாக்குறுதி அளிக்கவில்லை.

2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதை எதிர்த்து முதன்முதலில் குரல் கொடுத்தார். 03.03.2017 அன்று என்னை நெடுவாசலுக்கு அனுப்பி, அங்கு போராடி வரும் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க வைத்ததுடன், தனியாகவும் ஒரு போராட்டத்தை நடத்த வைத்தார்.

தொடர்ந்து 21.06.2017 அன்று கதிராமங்கலத்துக்கு என்னை அனுப்பி எண்ணெய்க் கிணறுகளுக்கு எதிராக போராட்டம் நடத்த வைத்தார். உச்சமாக அதே ஆண்டின் ஜூலை 28, 29, 30 ஆகிய நாட்களில் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைக்க வலியுறுத்தி காவிரி தமிழகத்திற்குள் நுழையும் ஓகனேக்கலில் தொடங்கி கடலில் கலக்கும் பூம்புகார்வரை விழிப்புணர்வுப் பயணத்தை மேற்கொண்டேன்.

2018-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி சென்னையில் உழவர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட்ட 18 தீர்மானங்களை நிறைவேற்றினார்.

அதே ஆண்டின் அக்டோபர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தொடங்கி நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வழியாக சிதம்பரம் வரை காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மற்றும் துண்டறிக்கைகளை வழங்கும் பயணத்தை மேற்கொண்டேன்.

2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வைத்த 10 கோரிக்கைகளில் , காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்வது முதல் கோரிக்கையாகும். அதுமட்டுமின்றி, என்னை இருமுறை முதலமைச்சரை சந்திக்க வைத்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தச் செய்ததுடன், இதே கோரிக்கைக்காக இரு முறை முதலமைச்சருக்கு கடிதமும் எழுத வைத்தார்.” என்று அன்புமணி கூறியிருக்கிறார்.