தேர்தல் பிரச்சார மேடையில் கண் கலங்கிய மருத்துவர் அய்யா! உருகிய தொண்டர்கள்!

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மேடையில் கண்கலங்கினார்.


சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளா் சந்திரசேகர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசினார். 

இந்த தோ்தலில் பிரசாரம் செய்வதற்கே கஷ்டமாக இருப்பதாகத் தெரிவித்த ராமதாஸ், தன்னுடைய மாவீரன் காடுவெட்டி குரு இருந்திருந்தால் தான் சிதம்பரம் மக்களவைத் தொகுதிப் பக்கம் வரவேண்டிய தேவையே இருந்திருக்காது என்றும், குருவே வேட்பாளரை வெற்றி பெறச் செய்திருப்பார் என்றும் கூறிய ராமதாஸ் மேடையில் எல்லோருக்கு முன்பாக கண்கலங்கினார்.

திருமாவளவன், பெண்கள் காதுகொடுத்துக் கேட்க முடியாத அருவருக்கத்தக்க வார்த்தைகளை பேசி வருவதாகக் கூறினார். 100 இளைஞா்களைக் கொடுங்கள் இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று கூறிய திருமாவளவனிடம் தற்போதைய சூழலில் 100 இளைஞா்களைக் கொடுத்தால் என்ன செய்வார் என மக்களுக்கே நன்றாகத் தெரியும் என்று அவர் கூறினார். 

திருமாவளவனை வளா்த்துவிட்டதே தான்தான் என்று கூறிய ராமதாஸ், ஆனால், அவர் சமூக சீரழிவு நடவடிக்கையில் ஈடுபடுவார் என நினைக்கவில்லை என்றார், திருமாவளவனை டெபாசிட் இழக்கச் செய்து அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். காடுவெட்டி குருவை நினைத்து ராமதாஸ் கண் கலங்கிய போது தொண்டர்கள் உருகிப் போயினர்.