ஆன்லைன் கிளாஸ்க்கு தடை போடுங்கப்பா… குழந்தைகள் பரிதாபத்தை பார்க்க முடியலை.

கேஜி குழந்தைகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் பள்ளி நிர்வாகிகள் மீது சட்டபூர்வமாகக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குழந்தைகள் பரிதாபத்தை பார்க்க முடியவில்லை என்று கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.


ஐந்தாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஐந்தாறு மணி நேரங்கள் ஆன்லைன் வகுப்புகள் வைத்து வதைக்கிறார்கள். தவிர, கிளாஸ் ஒர்க் என்ற பெயரில் அன்றெடுத்த பாடங்களை எழுதச் சொல்லி வாட்சப்பில் கோப்புகள் வந்து விழுகின்றன. அதற்கும் சேர்த்து குழந்தைகள் கூடுதலாகப் பல மணி நேரங்கள் மொபைலையோ, லேப்டாப்பையோ பயன்படுத்தும் நிலை உருவாகியிருக்கிறது. இது குழந்தைகளின் கண்களை நிச்சயம் பாதிக்கும். குழந்தைகளுக்கு மன அழுத்தத்தையும் உருவாக்கும்.

இது குறித்து பெற்றோர், ஆசிரியர்களிடம் புகார் எழுப்பினால், ‘இல்லேன்னாலும் உங்க பிள்ளைங்க டீவியோ, மொபைலோ பார்த்துட்டுதான் இருக்கப்போறாங்க. அதுக்கு படிக்கட்டும்’ என்று அலட்சியமான பதில் வருகிறது.

ஆறாம் வகுப்புகளுக்கு மேலான குழந்தைகளுக்கான ஆன்லைன் கிளாஸ் அல்லல்கள் குறித்து கேட்கவே வேண்டாம். கடும் சுமையுடன் அவர்கள் இந்த நாள்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

ஆன்லைன் கிளாஸ்கள் இந்த வருடத்தில் தவிர்க்க முடியாதவை என்கிறார்கள். ஆனால், கல்வியாளர்களின் ஆலோசனைகளுடன் அதற்கான நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். பாடச் சுமை கண்டிப்பாகப் பெருமளவு குறைக்கப்பட வேண்டும். இது குறித்த அவசிய நடவடிக்கைகள் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும்.

அதுசரி, யாரு எடுப்பா?