பிரசாந்த் கிஷோரை எதிர்த்து தி.மு.க.வில் இருந்து பழ.கருப்பையா விலகல்! அச்சத்தில் ஸ்டாலின்!

காமராஜர் காலத்தில் இருந்து அரசியல் செய்துவருபவர் பழ.கருப்பையா. உருப்படியாக எந்தக் கட்சியிலும் ஐந்து ஆண்டு காலம் இருந்ததாக சொல்லமுடியாது. அவ்வப்போது எங்காவது தாவிக்கொண்டே இருப்பார். அவர் இப்போது தி.மு.க.வில் இருந்து வெளியேறி இருக்கிறார்.


அவர் வெளியேறியது யாருக்கும் பெரிய செய்தி இல்லை, ஆனால், அவர் சொல்லியிருக்கும் தகவல்தான் புதிது. கட்சியிலிருந்து வெளியேறுவதாக ஸ்டாலினிடம் சொல்லிவிட்டு, காபி குடித்துவிட்டு வந்திருக்கிறேன் என்று பெருந்தன்மையாகவே சொல்லியிருக்கிறார். தி.மு.க.வில் இருந்து அவர் வந்ததற்கு என்ன காரணம் சொல்கிறார் தெரியுமா? 

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபின் வேறு கட்சியில் சேர்வதற்கு தயக்கம் இருந்தது. ஆனாலும் கலைஞர் விரும்பி அழைத்ததால் சென்றேன். கழகத்தின் நிகழ்கால போக்குகள், சிந்தனை பாங்குகள், கார்ப்பரேட் நிறுவனம் போன்று கட்சியை நடத்தும் விதம், அறிவும் நேர்மையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பணமே பிரதானம் என்று எண்ணும் சூழல் என்னிடம் மிகப்பெரும் சலிப்பை உண்டாக்கிவிட்டன.

ஊழல்வாதிகளை முன்னிலைப்படுத்துவது, ஊழலை பொதுவாழ்வின் அங்கமாக ஏற்பது, உட்கட்சிக்குள் விமர்சிக்க முடியாத விசுவாசம் போன்றவை எல்லாம் பொதுவாழ்க்கைக்கு ஏற்றது அல்ல என்று கூறியிருக்கிறார் பழ.கருப்பையா.

அட, சுருக்கமா பிரசாந்த் கிஷோர் போன்றவர்களை கட்சிக்குள் கொண்டுவருவதும், அவருக்கு பணம் கொடுப்பதற்கு ஊழல்வாதிகளை நம்பியிருப்பதும் சரியில்லை என்று பளீச்சென்று சொல்லவேண்டியதுதானே கருப்பையா..?