‘வணக்க்கம்’ நிர்மலா பெரியசாமியை கைகழுவிய பன்னீரு! செந்தில் பாலாஜிக்கு போட்டியாக செந்தில்நாதன்!

சன் டி.வி.யில் இருந்த நிர்மலா பெரியசாமி, தி.மு.க.வில் சீட் கேட்டார் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக சேனலில் இருந்து விரட்டப்பட்டார். அதன்பிறகு அங்கேயிங்கே என்று அலைந்து ஒரு வழியாக அ.தி.மு.க.வில் ஐக்கியமானார்.


தி.மு.க.வில் வேட்பாளராக நிற்கவேண்டும் என்று ஆசைப்பட்டதை, அ.தி.மு.க.விலாவது நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டு துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை சுற்றிச்சுற்றி வந்தார். அண்ணே அண்ணே என்று அவர் பன்னீரை, அவரது சகோதரிகள்கூட கூப்பிட்டிருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு நெருக்கம் காட்டினார்.

அதனால் இந்தத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் நின்று தானும் ஒரு அழகான வேட்பாளர் என்று பெயர் வாங்கலாம் என்று ஆசைப்பட்டார் நிர்மலா பெரியசாமி. ஆனால், அதற்கு ஒரேயடியாக தடை போட்டுவிட்டாராம் எடப்பாடியார்.

செந்தில் பாலாஜி இங்கே இருந்து தினகரன்கிட்டே போயி, அங்கேயிருந்து தி.மு.க.வில் நிற்கிறார். அவரை எந்தக் காரணம் கொண்டும் ஜெயிக்க விடவே கூடாது என்று திட்டம் போட்டிருக்கும் முதல்வர் எடப்பாடி, அதற்காகவே செந்தில்நாதனை களம் இறக்கியிருக்கிறார். இந்த செந்தில்நாதன் அ.தி.மு.க.வில் முக்கியப் புள்ளி என்பதுடன் செந்தில் பாலாஜிக்கு இணையாக செலவு செய்யவும்கூடியவர். அதனால் செந்தில்நாதனை நிறுத்தினால் வெற்றியை உங்களுக்குத் தருகிறோம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி அளித்தாராம். அதை நம்பி செந்தில்நாதன் நிறுத்தப்பட்டுள்ளார்.

அதேநேரம் தினகரன் கட்சியில் நிறுத்தப்பட்டிருக்கும் சாகுல் ஹமீதும் சாதாரண நபர் இல்லை. இஸ்லாம் வாக்குகளை பிரித்து வாங்குவதற்காகவே இவரை நிறுத்தியுள்ளார் தினகரன். ஆக, அரவக்குறிச்சி போட்டி செமயாக இருக்கப்போகிறது. இந்த இழுபறியில் அம்மணி நிர்மலா பெரியசாமியை இப்படி அம்போன்னு விட்டுட்டாங்களேன்னுதான் கவலை.