சுதந்திர பறவை சிதம்பரத்தின் முதல் நாள்! அதிர்ச்சியுடன் உற்று நோக்கும் அமித் ஷா!

அடக்கி வைக்கும்போது இரண்டு விதமான விளைவுகள் ஏற்படும்.


அடங்கிப் போவது ஒரு வகை என்றால், முன்னிலும் அதிக வீரியத்துடன் எழுவது அடுத்த வகை. இப்போது சிதம்பரத்தின் விடுதலை இரண்டாவது வகையாகத்தான் தெரிகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் 106 நாள் சிறைவாசத்துக்குப் பின் டிசம்பர் 4ம் தேதி இரவு 8 மணிக்கு திகார் சிறையில் இருந்து வெளியேவந்தார்.

அப்போது காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் பலர் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதுதான் பா.ஜ.க.வுக்கு முதல் அதிர்ச்சி. ஏனென்றால் சிதம்பரத்தை வரவேற்க குடும்பத்தார் தவிர யாரும் வரமாட்டார்கள் என்று தப்புக்கணக்கு போட்டது அரசு.  

அப்போது அங்கு வந்த செய்தியாளர்களிடம் கெத்தாகப் பேசினார் சிதம்பரம். “இந்த வழக்கு குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு நான் கீழ்ப்படியப் போகிறேன், வழக்கு குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். ஆனால் உண்மை என்னவென்றால், 106 நாட்களுக்கு முன்பிருந்து, இப்போது வெளியே வந்து நான் உங்களுடன் பேசும் இந்த நிமிடம் வரை ஒரு குற்றச்சாட்டு கூட

என் மீது சுமத்தப்படவில்லை. என் மீது ஒரு குற்றச் சாட்டு கூட முன் வைக்கப்படவில்லை. அதைப் பற்றி நான் பேசுவேன்’’ என்று தெளிவாக எடுத்துக்கூறினார். அதன் பின்னர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசிய ப.சிதம்பரம், அடுத்த நாள் காலை நாடாளுமன்றத்துக்கு வந்தார்.

அவர் வந்தபோது நாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய விலை உயர்வுக்கு எதிராகவும், ‘நான் வெங்காயம், பூண்டு சாப்பிடும் குடும்பத்தில் பிறக்கவில்லை’ என்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்காகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்கள், சிதம்பரத்தைக் கண்டதும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உற்சாகம் அடைந்தனர். சிதம்பரத்தை வரவேற்று கை குலுக்க ஆரம்பித்தனர். தி.மு.க.வின் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா ஆகியோர் சிதம்பரத்தின் கையைப் பிடித்து வரவேற்றனர்.

அவர்களுடன் இணைந்து வெங்காய விலை உயரவுக்கு எதிராக காந்தி சிலை அருகே நடந்த போராட்டத்திலும் பங்கெடுத்தார்.

நாடாளுமன்றத்தின் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட ப.சிதம்பரம் வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் அவரைச் சுற்றி மொய்த்தனர். “இன்று 12.30க்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் விரிவாகப் பேசுகிறேன்’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார் சிதம்பரம்.

அதன்படியே பகல் 12.30க்கு மேல் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அது எந்த இடம் என்றால், சிதம்பரம் தலைமைறைவாகிவிட்டார் என்ற செய்திகள் வந்த நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த இடம். 

"அமைச்சராக இருந்தபோது எனது பணிகள் மற்றும் எனது மனசாட்சி முற்றிலும் தெளிவாகவே இருந்தன. என்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், என்னுடன் உரையாடிய வணிக நபர்கள் மற்றும் என்னைக் கவனித்த பத்திரிகையாளர்கள் அதை நன்கு அறிவார்கள்.

என் குடும்பம் கடவுள் மீது நம்பிக்கை வைக்கிறது. நீதிமன்றங்கள் இறுதியில் நீதியை வழங்கும் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதற்கு மேல் வழக்கு பற்றி எதுவும் பேச முடியாது. இப்போது நாட்டின் மிக முக்கியமான பிரச்சியான பொருளாதாரத்துக்கு வருகிறேன். 

கடந்த ஆறு காலாண்டுகளில் மத்திய அரசாங்கம் பொருளாதாரத்தில் திறமையற்ற மேலாளராக மாறிவிட்டது. பிரதமர் பொருளாதாரம் குறித்து வழக்கத்திற்கு மாறான மௌனம் காத்து வருகிறார்” என்று குற்றம் சாட்டினார்.

முந்தைய பிரதமர் மன்மோகன் சிங்கை மௌனசாமி என்று பாஜக கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், இப்போதைய பிரதமர் மோடி பொருளாதார விவகாரத்தில் மௌனம் காக்கிறார் என்று விமர்சனம் செய்திருக்கிறார். 

அரசாங்கம் தற்போதைய மந்தநிலையை ‘சுழற்சி ’என்று அழைக்கிறது. நல்லவேளை பொருளாதார மந்த நிலை ஒரு சீசன் என்று அவர்கள் சொல்லாமல் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். இது கட்டமைப்பு ரீதியான சிக்கல்.

இந்த கட்டமைப்பு சிக்கல்களை தீர்க்கும் தீர்வுகள் அல்லது சீர்திருத்தங்கள் அரசாங்கத்திடம் இல்லை. இனி இந்த அரசால் பொருளாதாரச் சிக்கலை தீர்க்க முடியாது. காங்கிரசும் வேறு சில கட்சிகளும் பொருளாதாரத்தை மந்தநிலையிலிருந்து வெளியேற்றுவதற்கும் பொருளாதார வளர்ச்சியைத் தருவதற்கும் சிறந்தவை என்று நான் நம்புகிறேன். ஆனால் அந்த சிறந்த காலத்துக்காக நாடு காத்திருக்க வேண்டும்’’ என்றார் ப.சி.

இந்த பேச்சைக் கண்டு அதிர்ச்சி அடைடந்தது பா.ஜ.க. ஏதேனும் வகையில் இந்த பேச்சை வைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடமுடியுமா என்று யோசித்து வருகிறது. அதனால்தான், “ப.சிதம்பரம் அவரது ஜாமீன் நிபந்தனைகளை மீறிவிட்டார்’’ என்று கூறியிருக்கிறார் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். 

இனி சிதம்பரத்தின் ஆட்டம் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சிதம்பரத்தின் ஒவ்வொரு பேச்சையும் அமித் ஷா உற்றுக் கவனித்துவருகிறாராம். இதுக்கு மேலே என்ன நடவடிக்கை எடுப்பாராம்.?