எதிர்க் கட்சிகளின் மெளனப் பாராட்டு

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 40


அம்மா உணவகங்களுக்கு கிடைத்த மக்கள் வரவேற்பை அடுத்து அடுத்தடுத்து பல ஊர்களிலும் அம்மா உணவகம் தொடங்கும் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் சைதை துரைசாமி நேரடியாகச் சென்று, அங்கு எல்லாம் சரிவர நடக்கிறதா என்று ஆய்வு செய்துவந்தார்.

அன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் அம்மா உணவகம் மக்களுக்கு எப்படி பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என்று கூறிவந்தார். ஜெயலலிதா என்ன திட்டம் கொண்டுவந்தாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கும் பல்வேறு எதிர்க் கட்சியினர் இந்த திட்டத்துக்கு எந்த விமர்சனமும் வைக்கவில்லை. இது சைதை துரைசாமிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

இந்த ஆச்சர்யத்துக்கு விடையும் கிடைத்தது. அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்குப் போயிருந்த சைதை துரைசாமியின் பழைய நண்பர் எதிர்க்கட்சியில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருந்தார். தற்செயலாக அவரை ஒரு பொதுவிழாவில் சந்தித்த நேரத்தில் அம்மா உணவகம் எதிர்க் கட்சியினரிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றி பேசினார்.

‘நீங்கள் தொடங்கியிருக்கும் அம்மா உணவகம் உண்மையிலே ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கிறது. ஆகவே, எங்கள் கட்சியைச் சேர்ந்த யாரும் அம்மா உணவகம் பற்றி குறை கூறி பேச வேண்டாம். அப்படி பேசினால், பொதுமக்களின் கோபத்துக்கு ஆளாவது மட்டுமின்றி ஆதரவையும் இழக்க வேண்டியிருக்கும். ஆகவே, பாராட்டவும் வேண்டாம், விமர்சனம் செய்யவும் வேண்டாம்…’ என்று மேலிடத்தில் இருந்து வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறார்கள் என்று சொன்னார்.

எதிர்க் கட்சிகள் அம்மா உணவகத்தைப் பாராட்டிப் பேசவில்லை என்றாலும், எதிர்ப்புக்குரல் கொடுக்கவில்லை என்பதையே தனக்குக் கிடைத்த பாராட்டாக எடுத்துக்கொண்டார் சைதை துரைசாமி.

பகல், மதியம் ஆகிய நேரங்களில் மட்டுமே இயங்கிவந்த அம்மா உணவகம் இரவிலும் செயல்படுவதற்குக் காரணமாக இருந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர்.

- நாளை பார்க்கலாம்.