ஹெல்மெட் வாங்கினால் வெங்காயம் இலவசம்! சேலத்தை திணறடிக்கும் செம ஆஃபர்!

சேலத்தில் சமூக அக்கறை கொண்ட தலைக்கவசம் விற்பனை செய்யும் ஒருவர் ஹெல்மெட் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாக தருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


இலவசம் இலவசம் இலவசம் ! என்ற அறிவிப்பு வந்தாலே எவ்வளவு வேலைகள் இருந்தாலும் ஒரு வினாடி அது என்ன என்பதை பார்க்காமல் கடந்து செல்பவர்கள் கிடையாது. வெங்காயம் என்றாலே மிக விலை உயர்ந்த பொருளாக பேசப்பட்டு வந்த நிலையில் விலை உயர்ந்த நகைகளின் விலைக்கு இணையாக சமூக வலைதளங்களில் கிண்டல் அடித்து பதிவிட்டு வருவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். மார்வாடி கடையில் சென்று கூட ஒரு கிலோ வெங்காயத்தை கொடுத்து பணம் கேட்பது போல் கூட காட்சிகள் நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்துள்ளது. 

சேலம், கோட்டைப் பகுதியில் ஜம் ஜம் என்ற பெயரில் தலைக்கவசம் விற்பனை செய்யும் கடை உள்ளது. என்னதான் போலீசும், சமூக அமைப்புகளும் விபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அதை பற்றி அக்கறை இல்லாமல் பலர் தலைக்கவசம் அணியாமல் சென்று விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். 

எனவே அனைவரும் தலைக்கவசம் அணியவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் ஜம்ஜம் கடை உரிமையாளர் ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஒருபக்கம் தன்னுடைய கடைக்கு இலவச விளம்பரம் தேடிக்கொள்வது போல் இருந்தாலும் அவரது உண்மையான அக்கறை அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.

அதாவது தன்னுடைய கடையில் தலைக்கவசம் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது சேலத்தில் ஒரு கிலோ வெங்காயம் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பகிறது.

கடையில் விற்கப்படும் தலைக்கவசத்தின் விலை 350 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. எப்படி பார்த்தாலும் 350 ரூபாய்க்கு வெங்காயம் கிடைப்பதன் மூலம் ஒரு தலைக்கவசத்தின் விலை தள்ளுபடி போக 270 ரூபாய்க்கு கிடைப்பதால் மக்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் வாங்கி செல்கின்றனர்.

இதை போக்குவரத்து போலீசாரும் வரவேற்றுள்ளனர். தலைக்கவசம் அணிந்து செல்வதால் தேவையில்லாமல் 500 ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டியதில்லை என்பது மகிழ்ச்சிதானே?