சொத்துகளை பறித்துக் கொண்டு தந்தையை விரட்டிய மகன்கள்! 85 வயதில் பிச்சை எடுக்கும் பரிதாபம்!

சொத்துகள் அனைத்தையும் எழுதி வாங்கிக் கொண்டு பெற்ற தந்தையை மகன்கள் இருவர் விரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் அதம்பார் கிராமத்தை சேர்ந்தவர் 85வயது கோவிந்தராஜ். இவருக்கு ரமேஷ், மணிகண்டன், உட்பட 3 மகன்கள் உள்ளனர் .மூன்று மகன்களுக்கு திருமணம் செய்துவைத்து எந்த கடனும் இல்லாமல் தன்னிடம் இருந்த விவசாய நிலத்தை தலா 8மா,என மூன்று மகன்களுக்கு பிரித்துக்கொடுத்துள்ளார் கோவிந்தராஜ்.

சொத்துகள் அனைத்தும் தங்கள் பெயருக்கு வந்த பிறகு மகன்களுடன், மருமகள்களும் சேர்ந்து கொண்டு கோவிந்தராஜூக்கு ஒரு வேளை உணவு கூட கொடுக்காமல் வைத்திருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே விரட்டியுள்ளனர். 

இதனால் வேறு வழியில்லாமல் நாகூர், வேளாங்கண்ணி பகுதிகளில் பிச்சை எடுத்து தனது பிழைப்பை ஓட்டி வந்துள்ளார் கோவிந்தராஜ். இந்த நிலையில் சொத்துகளை பறித்துவிட்டு தாய் தந்தையை விரட்டிய மகன்களிடம் இருந்து சொத்துகளை மீண்டும் திருவண்ணாமலை கலெக்ட்ர் வாங்கி கொடுத்த தகவல் கோவிந்தராஜூக்கு தெரியவந்தது.

இதனை அடுத்து தனது சொத்துகளையும் தனது மகன்களிடம் இருந்து மீட்டுத்தர வேண்டும் என்று திருவாரூர் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்தார் கோவிந்தராஜ். அங்கும் இவரை கண்டு கொள்ளாத நிலையில் படிக்கட்டுக்கு அருகே பரிதாபமாக அவர் அமர்ந்துள்ளார்.

பின்னர் இரண்டு செய்தியாளர்கள் பார்த்து அவரிடம் விசாரித்து ஆட்சியை சந்திக்க ஏற்பாடு செய்தனர். இதனை தொடர்ந்து தனது சொத்துகள் தனக்கு மீண்டும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் மீண்டும் பிச்சை எடுக்க கிளம்பினால் அந்த பரிதாப முதியவர்.