பொறுப்பு கிடைக்காத வெறுப்பில் ஓ.பன்னீர்செல்வம்! எடப்பாடி பலே கேம்!

பொதுவாக 10 நாட்களுக்கு மேல் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளப்படும் சூழலில், தனக்குப் பதிலாக என்று ஒரு நபரை நியமித்துவிட்டுச் செல்வது முதல்வர்களின் பாணி. ஆனால், இந்த முறை அப்படி எதுவும் இல்லை என்பதுதான் சமீபத்திய செய்தி.


வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோரைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயணத்தில் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முதல்வருடன் செல்லவுள்ளனர். இதனால் தமிழகத்துக்கு அதிக முதலீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த 14 நாட்களும் தமிழகத்துக்கு யார் பொறுப்பு முதல்வராக நியமிக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது. 

துணை முதல்வராக இருக்கும் ஓ பன்னீர் செல்வத்துக்கு பா.ஜ.க.வில் அதீத செல்வாக்கு இருப்பதால், அவரிடம்தான் பொற்ப்பு ஒப்படைக்கப்படும் என்று நம்பப்பட்டது. அதேநேரம்,  முதல்வருக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர் தங்கமணியிடம் பொறுப்பு கொடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால், அந்த பொறுப்பு யாருக்கும் வழங்கப்படாது என்பது தெரியவந்துள்ளது. ஆம், வெளிநாடுகளில் இருந்தபடியே எல்லா வேலைகளையும் முதல்வர் பார்ப்பாராம். செல்போன், இணையம் இருக்கும்போது எதற்காக வேறு ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டாராம். 

பொறுப்பைக் கொடுத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை அறியாதவரா எடப்பாடி..?