அசர வைத்த கொங்கு MLAக்கள்! காலை வாரிய முக்குலத்து MLAக்கள்! ஓபிஎஸ் வீழ்ந்த கதை!

முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டியை தொடர்ந்து எதிர்கட்சித் தலைவருக்கான போட்டியிலும் தோல்வியை தழுவியதால் அதிமுக இனி முழுவதுமாக எடப்பாடி பழனிசாமி வசம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


கடந்த வாரம் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக தென் மாவட்ட எம்எல்ஏக்கள் குரல் கொடுத்திருந்தனர். இதனால் தான் அப்போதே எதிர்கட்சித் தலைவரை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் திங்கள் கிழமை கூடிய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நிலைமை வேறு மாதிரியாக இருந்தது.

கூட்டம் கூடியது முதலே ஓபிஎஸ் ஆதரவாளர்களாக அறியப்பட்ட எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் கூட அமைதியே காத்தனர். கிட்டத்தட்ட எம்எல்ஏக்கள் கூட்டத்தை எடப்பாடி ஆதரவாளர்கள் நடத்துவது போல் தெரிந்தது.

கடந்த வாரம் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய அதே கருத்தை தான் ஓபிஎஸ் மீண்டும் எடுத்து வைத்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளர் பொறுப்பை எடப்பாடிக்கு விட்டுக் கொடுத்தேன், அதே போல தற்போது தனக்கு எதிர்கட்சி தலைவர் பொறுப்பை கொடுக்க வேண்டும் என்பது தான் ஓபிஎஸ் பேச்சின் முக்கிய அம்சமாக இருந்தது.

அத்தோடு வழக்கம் போல் ஜெயலலிதா இருந்த போதே தான் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளதையும் அவர் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார். மேலும் தென் மாவட்டங்களில் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமே வன்னியர்களுக்கு கடைசி நேரத்தில் கொடுத்த இடஒதுக்கீடு தான் என்கிற ரீதியில் பேசிய போது அமைச்சர் எஸ்பி வேலுமணி குறுக்கிட்டு பேசியதாக சொல்கிறார்கள்.

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததை முக்குலத்தோர் விரும்பவில்லை என்றால் மதுரையில் எப்படி அதிக தொகுதிகளில் அதிமுக வென்றது என அவர் கேள்வி எழுப்பினார். மேலும் முக்குலத்தோர் கணிசமாக வசிக்கும் தொகுதிகளில் அதிமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விவரத்தையும் வேலுமணி எடுத்துக்கூறியதாக சொல்கிறார்கள்.

இந்த தேர்தல் முடிவு என்பது தேர்தல் பணி சார்ந்தே இருந்தது, நாங்கள் நன்றாக வேலை பார்த்தோம் கொங்கு மண்டலத்தை கைப்பற்றினோம், நீங்கள் வேலை பார்க்கவில்லை தோல்வியை தழுவினீர்கள் என்று வேலுமணி பேசியதை ஓபிஎஸ ஆதரவாளர்கள் கூட எதிர்க்கவில்லை என்கிறார்கள்.

ஒரு கட்டத்திற்கு மேலும் வாதம் தொடரந்த நிலையில் ஜனநாயக முறைப்படி எம்எல்ஏக்கள் வாக்களித்து எதிர்கட்சி தலைவரை தேர்வு செய்யலாம் என்று வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் முன்மொழிந்தனர். அதனை பெரும்பாலோனார் ஏற்றுக் கொண்டனர். ஆனால் எம்எல்ஏக்களில் தனக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என்பதை ஓபிஎஸ் உணர்ந்து கொண்டார்.

மேலும் முக்குலத்து எம்எல்ஏக்கள் சிலர் கூட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களை இருப்பதையும் அவர் புரிந்து கொண்டார். எனவே எம்எல்ஏக்களை வாக்களிக்க கூறி தோல்வியை தழுவ அவர் தயாராக இல்லை என்பதால் எதிர்கட்சித்தலைவர் பதவியை எடப்பாடியிடம் கொடுத்துவிட்டு புறப்பட்டுவிட்டதாக கூறுகிறார்கள்.

இதனிடையே வெள்ளிக்கிழமை வரைஎதிர்கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் ஓபிஎஸ்சே முன்னிலையில் இருந்ததாக சொல்கிறார்கள். ஆனால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எடப்பாடி பழனிசாமி தனக்கே உரிய பாணியில் எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டு பேசி அவர்கள் அனைவரையும் சரி செய்துவிட்டதாக கூறுகிறார்கள்.

இதனால் தான் எவ்வித பெரிய சிக்கல்களும் இல்லாமல் எதிர்கட்சித்தலைவராக எடப்பாடியை தேர்வு செய்ய முடிந்தது என்றும் சொல்கிறார்கள். இதனிடையே எடப்பாடியிடம் ஓபிஎஸ் எதிர்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டதாக கூற முடியாது என்கிற பேச்சும் அடிபடுகிறது. தற்போது அதிருப்தியில் உள்ள ஓபிஎஸ கட்சி தன் கையை விட்டு எடப்பாடியிடம் சென்றுவிட்டதையும் உணர்ந்துள்ளார்.

எனவே மறுபடியும் அதிமுகவில் தனது கை ஓங்க ஓபிஎஸ் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்பார்கள். எனவே தற்போதைய நிலையில் அதிமுக எடப்பாடி வசம் வந்தாலும் ஓபிஎஸ் மூலம் எப்போது வேண்டுமானாலும் பிரச்சனை எழலாம்.