கொள்ளை அடிக்கிறது அமெரிக்கா..! அலறும் உலக நாடுகள்.

தனக்குப் போகத்தான் தானம், தர்மம் என்பார்கள். அதை இந்த ஆபத்து காலத்தில் நன்றாகவே பார்க்க முடிகிறது. ஆம், உலகின் பெரியண்ணன் என்று தன்னைத்தானே எண்ணிக்கொள்ளும் அமெரிக்கா, இப்போது தன்னுடைய நாட்டுக்காக கொள்ளைக்காரனாக மாறிவருகிறது.


அமெரிக்கா தனது நாட்டிலுள்ள மருத்துவ சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு மட்டுமே பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், நடக்கும் சமாச்சாரங்கள் அதிர வைக்கின்றன. 

3M என்ற அமெரிக்க நிறுவனம் சீனாவில் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. அமெரிக்க உத்தரவு சீனாவில் உள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்லாது என்று முடிவு செயது, ஜெர்மன் போலீஸ் துறைக்கு இரண்டு லட்சம் முகக் கவசங்கள் விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டு பணமும் பெற்றுக் கொண்டது.

ஜெர்மனிக்கு முகக் கவசங்கள் ஏற்றி வந்த விமானம் தாய்லாந்தில் காணாமல் போனது. இதை அமெரிக்கா கடத்திவிட்டதாக ஜெர்மன் அதிகாரிகள் புகார் கூறிவருகின்றனர்.

பிரேசில் தான் ஆர்டர் கொடுத்திருந்த முகக் கவசங்களை மூன்று மடங்கு பணம் கொடுத்து அமெரிக்கா கைப்பற்றிச் சென்றுவிட்டது. இதனால் தனது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு உயிர்கள் ஆபத்துக்குள்ளாகி உள்ளன என்கிறது. கனடாவும், பிரான்ஸும் கூட அமெரிக்கா மீது குறை கூறிவருகின்றன.

ஜெர்மனி கென்யாவுக்கு அனுப்பிய 10 லட்சம் முகக்கவசங்கள் எங்கோ மாயமாகிவிட்டன. சர்வதேச வணிக நெட்வொர்க்குகள் அரசை விட வணிக நிறுவனங்களுக்கே நன்றாகத் தெரிகிறது என்கிறது ஜெர்மனி. இதனால் வோல்ஸ்வேகன் கம்பெனி அரசுக்கு உதவ முன்வந்திருக்கிறது.

இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில், கொரோனா முடிவுக்குப் பிறகு அமெரிக்கா வல்லரசாக நிற்காது, கொள்ளையரசாகத்தான் நிற்கும் என்பது உறுதி.