இதுவரை 170 பேர் பலி! தொடரும் வேதனை! பேய் மழையுடன் வெள்ள பூமியில் ராகுல், அமித்ஷா!

கடும் வறட்சி, குடிநீர் பஞ்சம் ஒரு சொட்டு மழைகூட வராத என்று பருவமழையை எதிர்பார்த்து கோடிக்கணக்கான மக்கள் ஏங்கித் தவித்து வந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது தென்மேற்கு பருவமழை.


முதலில் கேரளாவில் காலடி பதித்த தென் மேற்கு பருவ மழை படிப்படியாக கடலோர மாநிலங்கள் ஆன கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத்துக்கும் பரவத் தொடங்கியது.

கனமழை காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவு என தொடர் இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பிக்க முடியாமல் 4 மாநிலங்களிலும் 170 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தங்கள் உயிரை பொருட்படுத்தாது அனைத்து வழிகளிலும் மீட்டு வருகின்றனர்.

கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. 1,551 நிவாரண முகாம்களில் சுமார் 2.27 லட்சம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அம்மாநில அரசு செய்து கொடுத்துள்ளது.

அதே சமயம் நிலச்சரிவில் சிக்கி 72 பேர் உயிரிழந்துள்ள நிலையில் காணாமல் போன 58 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் வயநாடு தொகுதிக்கு சென்று மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய எம்.பி. ராகுல்காந்தி கேரள மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரவேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.

கர்நாடக மாநிலத்திலும் கனமழையால் கிட்டத்தட்ட 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. துங்கத்திரா அணையில் இருந்து வினாடிக்கு 1.70 லட்சம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடைய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோர் விமானத்தில் சென்று மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர். கர்நாடக மாநில மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து தரும் என அமித்ஷா தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேபோல் மகாராஷ்டிராவிலும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசிய பேரிடர் மீட்பு குழு மூலம் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அல்மட்டி அணையில் இருந்து வினாடிக்கு 5 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் கிருஷ்ணா நதியோரம் வசித்து வந்த  மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோலாப்பூர், சங்கிலி மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவம், உணவு வழங்கப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் கட்சி, போர்பந்த உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. காரத் ஆற்றில் தண்ணீர் பெருக்கடுத்து ஓடும் நிலையில் அங்கே மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்ல கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வேதுறை தெரிவித்துள்ளது கூடுதல் ஆறுதலாக மக்களுக்கு உள்ளது.