இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பேராசிரியர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவு இது.
ஆசிரியர் தினம் கொண்டாட அருகதை இருக்கிறதா..?

இன்று காலை முன்னாள் மாணவர் ஒருவர் அலைபேசியில் வந்தார். ஆசிரியர்தின வாழ்த்துக்களைச் சொன்னார். அவரும் ஒரு கல்லூரியில் ஆசிரியராய் இருப்பவராதலால் ‘உங்களுக்கும் என் வாழ்த்துகள்’ என்று சம்பிரதாயமாய் பேச்சை வளர்த்தேன். ஊதியத்தைப் பற்றிக் கேட்டபோது மார்ச் மாதத்திற்கான பாதி ஊதியத்திற்குப் பிறகு 3 மாதங்களாக எதுவும் வழங்கப்படவில்லை என்றார்.
17ஆண்டுகள் கல்விகற்று முனைவர் பட்டம் பெற்ற ஒருவரின் மாத ஊதியம் 5000 த்திலிருந்து 12000. 10ஆண்டுகளுக்குமேல் பணிசெய்து கொண்டிருப்பவர்களுக்கும் இதே விதிதான். (மதுரையை சார்ந்த யாசகர் ஒருவர் கடந்த மூணு மாதங்களில் 1லட்சத்து10ஆயிரம் ரூபாயை கொரானா நிதியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். அப்படியானால் அவரின் ஒருமாத ஊதியம் 35000 ரூபாய் என்றாகிறது)
அரசு, நோய்த்தொற்றை முன்னிட்டு கல்விக்கட்டணத்தில் 40% குறைத்துக் கட்டலாம் என்று சொன்னதை எந்த பள்ளியோ, கல்லூரியோ மதித்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க அவர்களிடம் நிதி இல்லை. எவ்வித அறவுணர்ச்சியும் இல்லாத இந்த முதலாளிகள் என்னவிதமான கல்வியை இந்தக்குழந்தைகளுக்கு வழங்கிவிடப் போகிறார்கள். ஏற்கனவே 70% உயர்கல்வி தனியார்வசம் இருக்கும் சூழலில் இனிவரும் நாட்களை நினைத்துப்பார்க்கவே நடுங்குகிறது. இத்தகைய மனசாட்சியே இல்லாத கல்வி முதலாளிகள் எப்படி உருவானார்கள்?
போனநூற்றாண்டில் மதப்பரப்பலோடு, சீர்திருத்தக் கிறித்தவதின் அடிப்படைகளில் ஒன்றான ‘சேவை’ என்பதை அடிப்படையாகக் கொண்டு மிசனரிகள் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார்கள். அழகப்பா செட்டியார், அண்ணாமலைச் செட்டியார் போன்ற உள்ளூர் பெருந்தனக்காரர்கள் நிலவுடைமைச் சமூகத்தின் (சொற்பமான) நல் மதிப்பீடுகளில் ஒன்றான ‘தானம்’ எனும் அடிப்படையில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார்கள்.
ஆனால் இன்று நவ இந்தியாவில் உருவாகியுள்ள புதிய முதலாளிகளால் கல்வி முழு வியாபாரமாகப் பார்க்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் கூட கல்வி முழு வியாபாரமே. இருந்தாலும் நவீன முதலாளியம் அதற்கேயுரித்தான (professionalism)அறத்தை பின்பற்றுவதால் கல்வியின் தரத்தை அவர்களால் தக்கவைத்துக்கொள்ள முடிகிறது.
இங்கு நிலவுடமை, முதலாளித்துவம் இரண்டின் கழிவுகளை மட்டுமே திரட்டி தின்று இயங்கும் புதுவிதமான ஹைபிரீட் முதலாளியம் இங்கு உருவாகியுள்ளது. தொழில், மருத்துவம், நீதி, நிர்வாகம் என சமூகத்தின் சகல துறைகளும் உடனடி லாபம், சுயநலம் என்பனவற்றை மையமாகக் கொண்டு மாறிவருவதன் விளைவைத்தான் கல்வித்துறையிலும் பார்க்கமுடிகிறது.
வீட்டுவேலை செய்பவர்களுக்கு ஒருமணி நேரத்திற்கு இவ்வளவு என்று கூலி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணிநிரந்தரம், வேலைப்பாதுகாப்பு என எதையும் யாரும் யாருக்கும் சொல்லவேண்டியதில்லை. இந்த லட்சணத்தில் புதிய கல்விக்கொள்கை.