தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்வி கிடைத்து என்ன பயன்..? நீட் தேர்வு முறையால் தமிழனுக்கு பயன் இல்லையே..?

நீட் தேர்வை ஒழிக்காமல் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை பெருகுவதால் எந்தப் பயனும் இல்லை என்று திராவிடர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.


மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், அரசு மருத்துவக் கல்லூரிகள் பெருகுவது தமிழ்நாட்டிற்குப் பெருமைதான், வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இதனால் யார் பலனடையப் போகிறார்கள்? 

‘நீட்’ தேர்வு -அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான ஒரு ஏற்பாடு - அதுவும் நேஷனல் மெடிக்கல் கவுன்சில் என்ற அமைப்பே இந்தியா முழுவதற்கும் - மருத்துவக் கல்லூரி அனுமதிக்கான ‘நீட்’ தேர்வை ஏற்பாடு செய்து நடத்தும் என்பது அரசமைப்புச் சட்ட விதிகளின்படி எதிரானது.

தேர்வுகளை நடத்தும் மருத்துவப் பல்கலைக் கழகங்களின் (அரசமைப்புச் சட்டப்படிக்கான) உரிமை; இதில் நுழைந்து ஒரு தனிச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பதும், உச்சநீதிமன்றமே அதற்கு முதலில் எதிராக இருந்து, பிறகு மறுசீராய்வு என்பதன்மூலம் இந்த சட்டப் பிரிவு ஆக்கிரமிப்புக்குத் துணை போனது மிகவும் வேதனைக்குரியது;

அது ஒருபுறம் இருக்க, இந்த ‘நீட்’ தேர்வுக்கு விலக்குக் கோரும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு மறுப்பது, நீதியை, மாநில அரசின் உரிமைகளை மறுத்த ஒரு தானடித்த மூப்பாகும்! ‘நீட்’ தேர்வு கடந்த 3, 4 ஆண்டுகளாக நடைபெற்றுள்ளதே - அவற்றில் எந்த ஆண்டிலாவது ஊழலோ, தவறுகளோ, குளறுபடிகளோ இல்லை என்று மத்திய அரசோ, உச்சநீதிமன்றமோ கூறிட முடியுமா?

100 பேர்களுக்குமேல் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதி பிடிபட்ட சந்தி சிரிக்கும் அவலம்தான் ‘நீட்’ தேர்வு என்ற தகுதி திறமைக்குப் பிறந்த மேதைகள் நடத்தும் இந்தத் தேர்வில்! ஏற்கெனவே மத்திய அரசுக்குக் கோட்டா 15 சதவிகித இட ஒதுக்கீடு மொத்த இடங்களில் மாநிலம் தரவேண்டும் என்ற ஏற்பாட்டினால், தமிழ்நாடு இழக்கும் இடங்கள். (பிற மாநிலத்தவர் அனுபவிக்கவே அவ்விடங்கள்).

அதில் இட ஒதுக்கீடே - பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்டு, வாய்ப்புகள் பறி போயிருக்கின்ற நிலை நாளையும் தொடரும். கடந்த 2016ல் - ‘நீட்’ இல்லாதபோது தமிழக மேனிலைப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பெற்ற இடங்கள் 30. ‘நீட்’ வந்த பிறகு பெற்றவை வெறும் 5 இடங்களே! அதுவும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெற்ற இடங்கள் 2 மட்டுமே!

‘நீட்’ இல்லாதபோது சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 62. ‘நீட்’ தேர்வுக்குப் பின் கிடைத்த இடங்கள் 1,220. கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகம். ‘நீட்’டினால் யாருக்குப் பலன், யாருக்கு இழப்பு என்பதை இந்தப் புள்ளி விவரம்மூலம் தெரிந்துகொள்ளலாம்.

‘நீட்’ தேர்வுக்கான விதிவிலக்கை வற்புறுத்திப் பெற உண்மையிலேயே தமிழக அ.தி.மு.க. அரசு வற்புறுத்தி, மத்திய அரசுடன் போராடியிருந்தால் வாங்கியிருக்க முடியுமே! ‘அம்மா ஆட்சி’ என்று பெருமையோடு கூறுகிறார்களே அந்த அம்மா - ஜெயலலிதா ‘நீட்’ தேர்வுக்கு எப்படி விலக்கு வாங்கினார்கள். நாம் வீடு கட்டிய பிறகு, வெளியாரைக் குடியேற்ற விடும் வெட்கக்கேடான - வேதனை இது!

எனவே, நீட் தேர்வை ஒழிக்க தமிழ்நாடே அந்த நிலைக்குப் பெரும் ஆதரவாக உள்ளது. எதிர்க்கட்சியாகிய தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் எல்லாம்கூட ஆளுங்கட்சியின் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனரே. மத்திய அரசுக்குப் பல வகைகளிலும் உதவும் அ.தி.மு.க. அரசால் ‘நீட்’டை ஏன் ஒழிக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் வீரமணி.