யாருக்குமே இன்னோவா கிடைக்க வாய்ப்பே இல்லையாம்… அதனால்தான் தைரியமாக அறிவித்தாராம் முருகன்.

சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை வெற்றிபெறவைக்கும் மாவட்டத் தலைவர்களுக்கு பா.ஜ.க. சார்பில் இன்னோவா கிடைக்கும் என்று மாநிலத் தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு கடும் விமர்சனத்தை எழுப்பியிருக்கிறது.


தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதே இன்னோவா அறிவிப்பு வெளியிட்டு ஆசை காட்டி வருகிறார் என்ற சலசலப்பு எழுந்துள்ளது. எங்கும், யாரும் ஜெயிக்கப் போவதில்லை என்று தெரிந்தே, இப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளார் முருகன் என்று மீம்ஸ் தெறிக்கவிடுகின்றனர்.

காணொளிக் காட்சி மூலம் நிர்வாகிகள் மத்தியில் பேசிய முருகன், “சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் மாவட்டத் தலைவருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும். இன்னும் 6 மாதங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழப் போகிறது. 

நாம் கைகாட்டும் நபர்கள்தான் ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறார்கள். ஆகவே, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து சட்டமன்றத்திற்கு பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட வேண்டும். 

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த கணிசமானோர் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்பார்கள். தற்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது” எனத் தெரிவித்துவிட்டுச் சென்றார். அடேங்கப்பா, கொசுத் தொல்லை தாங்கலையே என்று இதற்மும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.