மொத்த அம்சமும் இம்புட்டுத்தான்..! நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அம்சங்கள்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2020-21-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.


2020-21 நிதியாண்டில் நாட்டின் வருவாய் ரூ.22.46 லட்சம் கோடியாக உள்ளதாகவும், அதேவேளையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான செலவு ரூ.30.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதிப்பற்றாக்குறை 2020 நிதியாண்டில் 3.8 சதவீதமாகவும். 2021 நிதியாண்டில் 3.5 சதவிகிதமாக இருக்கும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

தனிநபர்களுக்கான வருமானவரியில் புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு ரூ.5 முதல் 7.5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் நபர்களுக்கு 10 சதவீத வரியும், ரூ.7.5 முதல் 10 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 15 சதவீத வரியும்.ரூ.10 முதல் 12.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு 20 சதவீதம் வரியும், ரூ.12.5 முதல் 15 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 25 சதவீதம் வரியும், ரூ.15 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வரி என புதிய வரி விதிப்பு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.5 லட்சம் மற்றும் அதற்கு குறைவாக ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் முதலீடு செய்துள்ள தொகைக்கான காப்பீடு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்கிறது. எல்ஜசி காப்பீட்டு நிறுவனத்தில் மத்திய அரசு வசம் உள்ள பங்குகளை ஐபிஓ மூலம் தனியாருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஐடிபிஐ வங்கியிடம் உள்ள பங்குகளையும் தனியார் மற்றும், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை மூலம் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார் நிதியமைச்சர்.

ஆதார் எண் அடிப்படையில் உடனடி மிண்ணனு பான்கார்டு ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மத்திய அரசின் கடன் தொகை கடந்த 2014 மார்ச் வரையிலான காலத்தில் 52.2சதவீதமாக இருந்ததாகவும், 2019 மார்ச் வரை 48.7 சதவீதமாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். பாதுகாப்புத்துறைக்கு 2019-20 நடப்பாண்டில் 3.16 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும். 2020-21ம் நிதியாண்டில் ரூ.3.23 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் வேளாண் பொருட்களை கொண்டு செல்ல தனி ரயில் மற்றும், காய்கறிகள், பழங்களைக் கொண்டு செல்ல கிஷான் உதான் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயத்தை உயர்த்தும் நோக்கில் 2020-21-ம் ஆண்டில் ரூ.15 லட்சம் கோடியும். நபார்டு வங்கியின் மூலம் ரூ.2.83 லட்சம் கோடிக்கு விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கு ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பாரத் எனும் திட்டத்தின் மூலமாக தனியார் பங்களிப்புடன் புதிய மருத்துவமனைகள் அமைக்க உள்ளதாகவும்,2020-21ம் ஆண்டில் சுகாரத்துறைக்கு ரூ.69 ஆயிரம் கோடியும், தூய்மை இந்தியாதிட்டத்துக்கு ரூ.12 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளதாக அறிவித்தார் நிர்மலா சீதாராமன். புதிய கல்விக் கொள்கையின் வரைமுறைகளை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும்.

இந்திய கல்வித்துறையில் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி வழங்கவும், கல்வி நிறுவனங்கள் வர்த்தக ரீதியான கடன் பெற அனுமதி அளிக்க புதிய திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு 2020-21 ம் கல்வியாண்டிற்க்கு ரூ.99,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மற்றும் திறனாய்வு கல்வியறிவு மேம்பாட்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய காவல்துறை மற்றும் தேசிய தடயவியல் அறிவியல் பல்கலைக்கழகங்கள் அமைக்க உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செல்போன், மின்னனு சாதனங்கள், செமி கன்டக்டர் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் திறனாய்வு கழகங்கள் மற்றும் வங்கிகளில் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் மூலம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரூ.1,480 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும்,ஏற்றுமதியாளர்களிடம் வசூலிக்கப்படும் வரிகளை திரும்ப பெறும் வகையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேசிய சரக்குப்போக்குவரத்துக் கொள்கைகளை வெளியிட கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து துறையின் மூலம் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், இதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

2023-ம் ஆண்டுக்குள் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ் சாலை முடிக்கப்படும் எனவும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ் சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படும் தாகவும். முக்கிய சுற்றுலாத் தளங்களுக்கு அதிகமான தேஜாஸ் ரயில்கள் இயக்கப்படும் எனவும், ஏற்கனவே தொடங்கப்பட்ட மும்பை-அகமதாபாத் இடையேயான அதிவேக ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும்,

நாட்டில் முக்கியத் துறைமுகங்களை தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு அதன் பங்குகளை மத்திய அரசுடன் பட்டியலிடப்பட உள்ளதாகவும். போக்குவரத்து சாலை கட்டமைப்புக்கு ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்திட்டங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் துறை டேட்டா சென்டர் அமைக்க ஊக்கம் அளிக்கப்படுவதாகவும், பாரத்நெட் திட்டத்துக்கு ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் திருமண வயது குறித்து பரிந்துரை செய்ய குழு அமைக்கப்படும் எனவும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.85ஆயிரம் கோடி, பழங்குடி பிரிவினருக்கு ரூ.53,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு,காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களை சீரமைக்க ரூ.30,757 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கார்ப்பரேட் பங்குப்பத்திரங்களின் மூலமாக அந்நிய நேரடி பத்திரங்கள் முதலீட்டை 9 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்த அனுமதி அளிக்க சட்ட திருத்தம் கொண்டு வர உள்ளன. மேற்கண்ட திட்டங்கள் 2020-21 நிதியாண்டில் செயல்பாட்டிற்கு வர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பேசினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பட்ஜெட்டைத் தாக்கலுக்கு பிறகு பேசிய நிர்மலா சீதாராமன, இந்த பட்ஜெட் மக்களின் வருவாயை உயர்த்தும் என்றும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளதாகவும். இந்தியப் பொருளாதாரத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் வலுவாக உள்ளது என்றும். பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாகவும்.சரக்கு மற்றும் சேவை வரி இந்த அரசின் வரலாற்றுச் சிறப்பான சீர்திருத்த நடவடிக்கை எனவும். பொருளாதார ரீதியில் நாட்டை உயர்த்த ஜிஎஸ்டி முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறினார்.

மணியன் கலியமூர்த்தி