அடுத்த டி.ஜி.பி. திரிபாதி! ஏமாந்துபோன ஜாபர் சேட்!

தமிழகத்தில் டி.ஜி.பி.யாக இருக்கும் டி.கே.ராஜேந்திரனின் பதவி ஜூலையுடன் முடிவுக்கு வருவதால், அடுத்த டி.ஜி.பி. யார் என்பதுதான், கடந்த ஒரு மாதமாக பெரும் விவாதமாக இருந்துவந்தது.


அந்த வகையில், அந்தக் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. ஆம், அடுத்த டிஜிபி பந்தயத்தில் திரிபாதி, ஜாபர் சேட், லட்சுமி பிரசாத் ஆகியோர் மட்டுமே இறுதிக் கட்டத்தில் நின்றார்கள். திரிபாதி தனக்கு நெருக்கமான வட மாநில அரசியல்வாதிகள் மூலம் லாபி செய்ய, ஜாபர் சேட் நேரடியாக எடப்பாடி மூலம் லாபி செய்தார். இவர்களில்  லட்சுமி பிரசாத் பா.ஜ.க. மூலம் லாபி செய்தார்.

இந்த நிலையில்தான் கடந்த வாரம் யு.பி.எஸ்.சி. கூட்டம் நடந்தபோது தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தற்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றார்கள். இக்கூட்டத்தை யுபிஎஸ்சி உறுப்பினர்களான ரஜினிகாந்த் மிஸ்ரா, பிரஜ் ராஜ் ஷர்மா, பரத் பூஷன் வியாஸ் ஆகியோர் நடத்தினார்கள். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மாநில அரசு அனுப்பிய அதிகாரிகளில் இருந்து, மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து அந்த மூவர் பட்டியலில் இருந்து ஒருவர் பெயரை மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்துவிட்டது.

அப்படி பரிந்துரை செய்யப்பட்ட பெயர் ஜாபர் சேட் அல்ல, ஆம், திரிபாதிதான் அடுத்த டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட இருக்கிறார். இதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளிவர வாய்ப்பு உண்டு என்கிறார்கள். பல்வேறு வழக்குகள் ஜாபர்சேட் மீது இருந்ததுதான் அவரை கவிழ்த்துவிட்டதாம். திரிபாதி வந்தால் நாட்டுக்கு என்ன நல்லது நடக்கும் என்று கேட்கிறீர்களா? அது எடப்பாடிக்கு மட்டும்தான் தெரிரியும்.