நியூயார்க்: நண்பனுக்காக, தனது சிறுநீரகங்களில் ஒன்றை 68 வயது முதிவயர் தானமாக அளித்துள்ளார்.
68 வயதில் நண்பனுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்த நெகிழ வைத்த நபர்..! 3வது முறையாக நண்பன் உயிரை காப்பாற்றிய அதிசயம்! எப்படி தெரியுமா?

அமெரிக்காவின் விஸ்கான்சின் - சிப்பேவா ஃபால்ஸ் பகுதியை சேர்ந்தவர் டான் எலியட். இவரது நண்பர் கைல் பிராண்ட். இருவருக்கும் 68 வயதான நிலையில், சிறு வயது முதலே, இவர்கள் 2 பேரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இதில், எலியட் சிறு வயது முதலாக, அடிக்கடி உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கிக் கொள்வதும், அவரை கைல் பிராண்ட் காப்பாற்றுவதும் வாடிக்கையாக உள்ளது.
இதன்படி, முதலில், 4வது கிரேட் படித்தபோது, சிறுவர்களான எலியட், பிராண்ட் நீச்சல் குளத்தில் குளித்து விளையாடினர். அப்போது திடீரென எலியட் நீரில் மூழ்கிவிட்டாராம். அவரை உடனடியாக, கைல் பிராண்ட் தனது தந்தை உதவியுடன் நண்பனின் உயிரை காப்பாற்றினார். இதேபோல, 1972ம் ஆண்டில் 2வது முறையாக எலியாட் மோட்டார் சைக்கிள் ஓட்டி, விபத்தில் சிக்கினார்.
தலையில் பலத்த காயம் அடைந்த அவரை, பிராண்ட் உரிய நேரத்தில் காப்பாற்றி, மருத்துவமனையில் சேர்த்தார். பிறகு, 1987ம் ஆண்டு எலியட்டிற்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. அதனை பரிசோதித்த மருத்துவர்கள், எதிர்காலத்தில் அவரது சிறுநீரகங்கள் படிப்படியாக செயலிழந்துவிடும் என்பதால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு, தயாராக இருக்கும்படி கூறியுள்ளனர்.
இதற்கேற்ப, மாற்று உறுப்பு கொடையாளி தேடி எலியாட் முயற்சித்தார். ஆனால், ஆபத்பாந்த்வானாக, உயிர் நண்பன் கைல் பிராண்ட் மீண்டும் கைகொடுத்தார். நண்பனுக்காக, தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக தர, அவர் ஒப்புக் கொண்டார். இதன்படி, சமீபத்தில் எலியாட்டின் சிறுநீரகம் செயலிழக்கவே, அவருக்கு மருத்துவர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்தனர்.
கைல் பிராண்டும் சொன்னபடி, சிறுநீரக தானம் தர ஒப்புக் கொண்டு, மருத்துவமனை சென்றார். அவரது முழு ஒப்புதலுடன், அக்டோபர் 23ம் தேதியன்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கைல் பிராண்டின் சிறுநீரகங்களில் ஒன்றை எடுத்து, எலியாட்டின் உடலில் வெற்றிகரமாக டாக்டர்கள் பொருத்தினர். 68 வயதிலும் நண்பனுக்காக, சிறுநீரக தானம் செய்த முதியவர் கைல் பிராண்ட், பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல...