பெண்ணாக இருந்து ஆணாக மாறி நியுஸ் ரீடர் ஆன முதல் திருநம்பி..! என் உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!

திருவனந்தபுரம்: டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் திருநம்பி என்ற பெருமையை கேரள நபர் பெற்றுள்ளார்.


27 வயதாகும் ஹிருத்திக் சிறு வயது முதலே ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என, ஆசைப்பட்டு வந்தார். ஆனால், அவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பி என்பதால், அவரது கனவு கானல் நீராக மாறிவிட்டது. சரி, சாதாரண வேலைக்குச் செல்லலாம் என்றால், அங்கும் பல்வேறு பாலியல் சீண்டல்கள், சமூக அளவுகோல்கள் காரணமாக, முயற்சிகள் ஏதும் கைகூடவில்லை.

திருநம்பியாக மாறியது மிகப்பெரும் குற்றம் என நினைக்கும் அளவுக்கு மன ரீதியான சித்ரவதைக்கு தள்ளப்பட்ட ஹிருத்திக், கடைசியாக எடுத்த முடிவுதான், டிவி செய்தித் தொகுப்பாளராக மாறுவது... 

இதன்படி, மலையாளத்தில் வெளிவரும் ஜீவன் டிவியில், வாரந்தோறும் ஒளிபரப்பாகும் செய்தி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் வேலையில் ஹிருத்திக் சேர்ந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் வேலை கிடைத்தது மிகப்பெரிய மகிழ்ச்சியாக உள்ளதென்று, ஹிருத்திக் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊடகத் துறையில் முன் அனுபவம் இல்லை என்றாலும், போகப் போக தகுந்த அனுபவம் கிடைக்கும் என நம்புவதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். ஹிருத்திக், திரிபாதி எனும் திருநங்கையை திருமணம் செய்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.