உள்ளாட்சித் தேர்தலுக்கு புதிய அட்டவணை! மீண்டும் நீதிமன்றத்துக்கு போகுமா தி.மு.க.?

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.


அதற்குப் பிறகு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, முறையாக இட ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தி.மு.க. வழக்குத் தொடர்ந்தது. சரியான முறையில் இட ஒதுக்கீடு செய்த பிறகு, தேர்தலை அறிவிக்க வேண்டுமென நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 - டிசம்பர் 30 என இரு கட்டங்களாக நடக்குமென தமிழகத் தேர்தல் ஆணையம் டிசம்பர் 2ம் தேதி அறிவித்தது. 

இந்த அறிவிப்பை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஊரகப் பகுதிகளுக்கு மட்டுமல்லாமல், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளுக்கும் சேர்த்து தேர்தலை அறிவிக்க வேண்டுமென கூறினர். தி.மு.கவின் சார்பில் இந்த அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. 

இது தொடர்பாக டிசம்பர் 2ம் தேதியே உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைகள் டிசம்பர் ஐந்தாம் தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பு இன்று காலையில் வெளியானது. தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் போப்தே, நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை அளித்தது.

அதன்படி, புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களைத் தவிர பிற 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளில் தேர்தலை நடத்திக்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. அந்த 9 மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்து 4 மாதங்களுக்குள் தேர்தலை அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதனால், காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என கூறியுள்ளது.

அனைத்து வரையறைகளையும் முடித்துவிட்டுத்தான் தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும் என்று தி.மு.க. கோரிவந்தாலும், இன்று மாலையில் புதிய அட்டவணை வெளியிட தமிழக தேர்தல் ஆணையம் தயாராகவே இருக்கிறது. அதனால், மீண்டும் தி.மு.க. நீதிமன்றம் போகும் என்றே நம்பப்படுகிறது.