உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே பச்சிளம் குழந்தையை வீசிவிட்டு சென்ற நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
இப்போது தான் பிறந்துள்ளது..! புதருக்குள் கிடந்த பச்சிளம் குழந்தையை பார்த்து அதிர்ந்த அதிகாரிகள்! ஊட்டி பரபரப்பு!

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே மரங்கள் அடர்ந்த பகுதியில் பிறந்து சில மணிநேரங்களே ஆன பச்சிளம் குழந்தை அழுகை சத்தம் அந்த வழியே நடந்து சென்றவர்களுக்கு கேட்டது. இதுகுறித்த உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவக்குழு, குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
அடர்ந்த பகுதியில் குளிரில் அவதிப்பட்டு வந்த குழந்தையை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்துவருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்தபோது ஆண் குழந்தை பிறந்து சில மணிநேரங்கள்தான் இருக்கும் என்றும், ஆனாலும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், அந்த குழந்தையின் எடை 2.48 கிலோ இருப்பதாகவும் தெரிவித்தனர்.
குழந்தைக்கு சிகிச்சை முடிந்த பின்னர் தத்து வள மையத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இது குறித்து தாவரவியல் பூங்கா அதிகாரிகள், பூங்காவுக்கு அருகில் மரங்கள் அடர்ந்த ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அதிகாலையில் ஆள்நடமாட்டம் இல்லாதபோது யாரோ குழந்தையை வீசிச் சென்றுள்ளனர் என்றார்.
மேலும் கடந்த மாதம் ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியில் இதேபோன்று பச்சிளம் குழந்தை ஒன்று வன விலங்குகள் நிறைந்த காட்டில் யாரோ வீசிவிட்டு சென்றுள்ளனர். இதுபோன்ற ஈவிரக்கமற்ற செயலில் ஈடுபடும் பெண்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.