3 பேரையும் கொன்றுவிட்டு குளியல் அறையில் குளித்துவிட்டு சென்றேன்! போலீசை அதிர வைத்த சைக்கோ கொலைகாரன் வாக்குமூலம்!

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் வீட்டுப் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில் அது தொடர்பாக துப்புத் துலக்க கடந்த நான்கைந்து நாட்களாக போலீசார் திணறி வந்தனர் இந்நிலையில் ஒருவழியாக கொலையாளி சிக்கியுள்ளான்.


சந்தேகத்துக்கு இடமான கார் ஒன்று உமாமகேஸ்வரியின் வீட்டை சில முறை கடந்து சென்றதாக கூறப்படுகிறது. பல்வேறு கோணங்களில் வழக்கை விசாரித்து வந்த போலீசார் அந்தக் கார் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தக் கார் தி.மு.க. பிரமுகரான சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுடையது என தெரியவந்தது இதையடுத்து கார்த்திகேயனை தேடிய போலீசார் அவர் மதுரையில் பதுங்கி இருப்பதை தெரிந்து கொண்டு அங்கு சென்று அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

விசாரணையில் தான் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேரை கொலை செய்ததை கார்த்திகேயன் ஒப்புக்கொண்டார். அதற்கு அவர் கூறிய காரணங்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தன. உமா மகேஸ்வரியால் தனது தாயார் சீனியம்மாள் இன் அரசியல் எதிர்காலம் சீர்குலைந்து விட்டதாக கார்த்திகேயன் குற்றம்சாட்டினார்.

சிறுவயதிலிருந்தே உமா மகேஸ்வரியின் மீது தனக்கு கோபம் இருந்ததாகவும் அவரை தீர்த்துக்கட்ட நேரம் பார்த்துக் கொண்டு இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 23 ஆம் தேதி மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் நினைவு நாள் என்பதால் போலீசார் அனைவரும் அங்கு சென்று விடுவார்கள் என்று கூறிய கார்த்திகேயன் எனவே உமா மகேஸ்வரியை கொலை செய்ய அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்ததாக தெரிவித்தார்.

 தான் உமா மகேஸ்வரி வீட்டுக்கு சென்றபோது தான் தி.மு.க. பிரமுகரின் மகன் என்பதால் உமா மகேஸ்வரியின் கணவர் தன்னை வரவேற்று அழைத்துச் சென்றதாகவும் அப்போது தான் உமா மகேஸ்வரியால் தனது தாயாரின் அரசியல் எதிர்காலம் சீர்குலைந்து விட்டதாக தான் கூறியதாகவும் கார்த்திகேயன் தெரிவித்தார்.

அப்போது அங்கு வந்த உமா மகேஸ்வரி தவறாக பேசாதே என கண்டித்ததாகவும் அதனால் ஆத்திரமடைந்த தான் உமா மகேஸ்வரியை கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்தார் இதனால் பதற்றமடைந்த முருகேசன் தன்னை தடுக்க வந்தபோது அவரைத் துரத்திக் கொண்டு சென்று படுக்கை அறையில் வைத்து சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்றதாக கார்த்திகேயன் கூறினார்.

அப்போது வீட்டுக்கு வந்த பணிப்பெண் மாரியம்மாள் தன்னை பார்த்து விட்டதாகவும், எனவே அவரையும் சமையல் அறைக்குள் தள்ளி சென்று சரமாரியாக கத்தியால் குத்தியதாகவும்  அவர் இறக்காததால் சமையல் அறையிலிருந்த பாத்திரங்களால் சரமாரியாக தலையில் அடித்துக் கொன்றதாகவும்  கார்த்திகேயன் தெரிவித்தார்.

பிறகு தனது தடயங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு நகைக்காக கொலை நடந்தது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க உமாமகேஸ்வரியின் கழுத்தில் இருந்த நகையை எடுத்துக் கொண்டதாகவும் தனது கத்தியில் இருந்த ரத்தக்கறையை அந்த வீட்டிலேயே கழுவி நகை இருந்த பையில் போட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். பின்னர் தனது உடலில் இருந்த ரத்தத்தை கழுவ அங்கேயே குளித்து விட்டு வெளியில் வந்த தான் நகை மற்றும் கட்டி இருந்த பையை தாமிரபரணி ஆற்றில் வீசிவிட்டு தப்பிச் சென்றதாகவும் கூறினார்.

இதுகுறித்து தனது தாயார் சீனி அம்மாளிடம் தெரிவித்தபோது அவர்  பதறிய தாகவும் தெரிவித்தார். இந்தக் கொலை செய்ய தான் கூலிப்படையை வைத்துக் கொள்ளவில்லை என்றும் தானே மூவரையும் கொலை செய்ததாகவும் தெரிவித்த கார்த்திகேயன், தாம் ஒரு சைக்கோ கொலைகாரன் என்று கூறினார் எனினும் அவரது வாக்குமூலத்தில் சந்தேகம் இருப்பதால் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்