மீண்டும் கூட்டணியைக் குலைக்கும் நேரு! ஸ்டாலின் மீது அப்படியென்ன கோபமோ?

தி.மு.க.வினர் யாரும் ஸ்டாலினை துண்டுச்சீட்டு என்றோ அல்லது பேசத் தெரியாதவர் என்றோ வெளிப்படையாகப் பேசுவதில்லை.


எதிர்க் கட்சியினரை திட்டுவது போன்று ஸ்டாலினை துண்டுச்சீட்டு என்றும் பேசத் தெரியாதவர் என்றும் பேசியது மட்டுமின்றி கூட்டணிக் கட்சிகளையும் துண்டாடும் வேலையில் இறங்கியிருக்கிறார் நேரு.

திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற புத்தகவிழாவில் நேரு பேசியதுதான் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி, தி.மு.க.வினரையும் அலற வைத்துள்ளது. அவர் பேசியது இதுதான். ‘‘எங்களது தலைவர் ஸ்டாலின் துண்டுச்சீட்டு வைத்து பேசுகிறார் என்றும் நிறைய உளறுகிறார் என்றும் விமர்சிக்கிறார்கள்.

கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொன்னவர்கள் நீங்கள். அமைச்சராக இருக்கக்கூடிய திண்டுக்கல் சீனிவாசனுக்கு பிரதமர் யாரென்றே தெரியவில்லை. மன்மோகன் சிங் என்கிறார். உலகத்திலேயே பெரிய விஞ்ஞானியான செல்லூர் ராஜு தெர்மாக்கோலை எடுத்துக்கொண்டு அணையை மூடச் செல்கிறார். ஆவியாவதை தடுக்கிறாராம். 

இவர்கள் இப்படியெல்லாம் குறை சொல்வதை தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் கேட்டுக்கொண்டு இருப்பதுதான் எங்களுக்கு பெரிய வருத்தமே. எங்களை அடித்தால் உங்களையும் அடிப்பதாகத்தானே அர்த்தம். நீங்கள் அதனை கண்டிக்க வேண்டுமல்லவா? என்று கேட்டிருக்கிறார்.

அதாவது ஸ்டாலினை யாராவது திட்டினால் கூட்டணிக் கட்சிகள் சண்டைக்குப் போக வேண்டுமாம். அப்படியென்றால் தி.மு.க.வினர் பதில் சொல்வதற்கு லாயக்கு இல்லாதவர்கள் என்று நினைக்கிறாரா என்று தி.மு.க.வினரே கோபம் ஆகிறார்கள். ஏற்கெனவே காங்கிரஸ் மீது வம்பு வளர்த்தவர்தான் நேரு. மீண்டும் இப்போதே வம்பு வளர்க்கிறாரே...