உள்ளாட்சிக்கு வோட்டிங் மிஷன் வேணுமாம்! வாக்குச்சீட்டு நடைமுறையை மாற்றுவது எதற்காக தெரியுமா?

தமிழ்நாட்டில் மூன்றாண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல்களை தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்த தமிழக அரசு உயர்நீதிமன்ற உத்தரவால் வேண்டா வெறுப்பாக வழிக்கு வந்திருக்கிறது.


கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது எல்லா எதிர்கட்சிகளும் சந்தேகம் கிளப்பின.இந்த நிலையில் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர். அவர் பெயரும் பழநிச்சாமிதான்,ஆனால் ஐ.ஏ.எஸ்.

பீகார்,கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,Control unitகள்,மற்றும் VVPAT's கருவிகளை எடுத்துச் செல்ல இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதியளித்து விட்டது.அவற்றை எடுத்துவர மாநகராட்சி மற்றும் நகராட்சி அதிகாரிகள் போலீசாருடன் அந்த இயந்திரங்களை எடுத்துவர போய்விட்டனர்.

வாக்குப்பதிவு இந்த முறை மின்னணு முறையில் தான் நடக்கும் என்று தெரியவந்தபிறகும் திமுக உள்ளிட்ட எல்லா கட்சிகளும் மெளனமாக இருப்பதைப் பார்த்தால் , வாக்குச் சீட்டோ,மின்னணு இயந்திரமோ எப்படியாவது தேர்தல் நடந்தால் சரி என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

மூன்றாண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் யாரிடம் போய் தங்களது குறைகளை சொல்வது என்று அறியாது நின்ற மக்களுக்கு ஜனநாயக ரீதியில் தீர்வு வரும் என்று நம்புவோம்.