குவியல் குவியலாக துப்பாக்கி! கொத்து கொத்தா குண்டு! மிரள வைத்த தேனி அரசியல் கட்சி பிரமுகர்!

தேனி மாவட்டம் போடி அருகே ஏ.கே.47 உள்ளிட்ட துப்பாக்கிகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கொள்ளையர்களை போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.


போடி அருகே உள்ளது பொட்டல்களம் என்ற ஊர். இங்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளரான கெளர்மோகன் தாஸ் என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. இங்கு பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கொள்ளைக் கும்பல் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். 

போலீஸாரைக் கண்டதும் அங்கு பதுங்கியிருந்த கொள்ளையர்கள் தப்பி ஓடினர். கெளர்மோகன்தாஸ் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அங்கு சோதனை செய்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்து ஒரு ஏ.கே 47 துப்பாக்கி, ஒரு ஸ்டென் கன்,  இரண்டு ஏர் பிஸ்டல்கள், ஒரு நாட்டுத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. 

பட்டாக் கத்திகள், வாள், ஈட்டி போன்ற பயங்கர ஆயுதங்களும், பல்வேறு மொபைல் போன்களும் கைப்பற்றப்பட்டன. மேலும், கோயில் கலசங்கள், சிலைகளும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டன. கெளர்மோகன்தாஸ் கைது செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார் தப்பியோடிய கொள்ளையர்களையும் தேடி வருகின்றனர்.