கிரண்பேடிக்கு நோ சொன்ன நாராயணசாமி..! குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம்

ஆளுநரின் வேண்டுகோளை நிராகரித்தார் நாராயணசாமி - குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றம் தீர்மானம்.


நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி இத்தீர்மானத்தை நிறைவேற்றக்கூடாது என அனுப்பிய கடிதத்தை முதலமைச்சர் நாராயணசாமி நிராகரித்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் பேச, பின்னர் அவையில் அது முறைப்படி நிறைவேற்றப்பட்டது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை மைய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று கோரிய அத்தீர்மானத்தில், மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளதாலும் இலங்கைத் தமிழர்கள் அதில் சேர்க்கப்படவில்லை என்பதாலும் ஏற்கமுடியாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்றைய கூட்டத்தை, எதிர்க்கட்சிகளான என்.ஆர். காங்கிரஸ், அதிமுக ஆகியவை புறக்கணித்திருந்தன. நியமன உறுப்பினர்களான பா.ஜ.க.வின் மூவர் தீர்மானத்தைக் கண்டித்து அவையின் வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.