நிர்மலா சீதாராமன் அல்வா கொடுத்துவிட்டாராம்... சொல்கிறார் நம்மவர் கமல்.

தொடக்கத்தில் அதிகாரிகளுக்கு.. முடிவில் மக்களுக்கு..! - அல்வா பட்ஜெட் என்கிறார் கமல்ஹாசன். நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்செய்யப்பட்ட மத்திய வரவு செலவுத் திட்டம் குறித்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார்.


கமல் தன்னுடைய டுவிட்டரில், “அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட், மக்களுக்கு அல்வாவுடன் முடிவடைந்தது. நீண்ட உடை, ஆனால் சரியான தீர்வுகள் இல்லை.” என்று கமல் குறிப்பிட்டுள்ளார். 

பொதுவாக, மத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கையை அச்சடிக்கும் பணியை, அல்வா கிண்டி ஊழியர்களுக்கு வழங்கி தொடங்குவது மரபு. அதன்படி கடந்த 20ஆம் தேதியன்று டெல்லியின் மைய அரசு தலைமை அலுவலகங்கள் அமைந்துள்ள நார்த் பிளாக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள நிதியமைச்சகத்தில் அல்வா கிண்டும் மரபு நிகழ்வை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தொடங்கிவைத்தார்.

அந்தப் படம் செய்திகளில் வெளியானதும், வரும் பட்ஜெட்டில் அல்வா கொடுக்காமல் இருப்பாரா என்கிறபடி சமூக ஊடகங்களில் பல தரப்பினரும் கிண்டலும் கேலியுமாக கருத்துகளைக் கூறியிருந்தனர். ஆனால், எந்த ஆட்சியாக இருந்தாலும் இது வழக்கமாகப் பின்பற்றப்படும் ஒரு மரபுதான் என்கிறார்கள், நிதியமைச்சக அதிகாரிகள்.