வயதுக்கு வந்துவிட்டேன்! ஆனால் 18 வயது ஆகவில்லை! விவகாரமான கோரிக்கையுடன் நீதிமன்றம் சென்ற 16 வயது பெண்!

டெல்லி: வயதுக்கு வந்தாலும், மைனராகவே உள்ள முஸ்லீம் சிறுமி ஒருவர் தனது காதலனுடன் சேர்ந்து வாழ முடியுமா, என்ற விவகாரத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.


உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில்  மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தான் வயதுக்கு வந்துவிட்டதால், தான் விரும்பும் ஒரு நபருடன் இணைந்து வாழ அனுமதிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இந்திய சட்டப்படி, 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் மைனராக கருதப்படுகின்றனர்.

ஆனால், இஸ்லாமிய நடைமுறைப்படி வயது வந்த பெண்கள் தங்களது விருப்பம்போல திருமண வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள சுதந்திரம் உள்ளதாக, அந்த பெண் கூறியிருக்கிறார். அதாவது, தனது திருமண வாழ்விற்கு, இந்திய சட்டம் தடையாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அந்த பெண்ணை காப்பகம் ஒன்றில் தங்கும்படி உத்தரவிட்டது. அத்துடன், இவ்விவகாரத்தை விசாரணைக்கு ஏற்று உரிய தீர்ப்பு வழங்கும்படி உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இதை தற்போது உச்ச நீதிமன்றமும் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. முதல்கட்டமாக, இதுபற்றி விளக்கம் கேட்டு உத்தரப் பிரதேச மாநில அரசுக்கு நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி மற்றும் அஜய் ரோஸ்தகி அடங்கிய அமர்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

குறிப்பிட்ட சிறுமி, ஒருவரை விரும்புவதாகவும், அவரது பெற்றோர் அதற்கு மாறாக, கட்டாய திருமணம் செய்துவைக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்பேரில், அந்த சிறுமியின் தந்தை போலீசில் புகார் செய்யவே, அவர் நீதிமன்றத்தின் கதவை நாடியுள்ளார். இவ்விவகாரம் இந்திய நீதித்துறையில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.