பாம்பே பட ஸ்டைலில் மதம் மாறி காதலித்து ஓடிப்போன ஜோடி...பெற்றோரிடம் இருந்து காதல் ஜோடிக்கு காவல் துறை பாதுகாப்பு தருமா..?

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அதனால் ஜாதி, மதம், அந்தஸ்து எல்லாம் பார்த்து காதல் வருவதில்லை. ஆனால், பெற்றோர்கள் அப்படியெல்லாம் காதலுக்கு மரியாதை செய்வதில்லை. சினிமாவில் காதலை ரசிக்கும் பெற்றோர், தங்கள் வீட்டில் நடக்கும்போது, விரட்டிவிரட்டி பிரிக்க முயல்கிறார்கள்.


கிருஷ்ணகிரி மாவட்டம் பணங்காமட்லு கிராமத்தைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநரான விஜய். இவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இவருக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஹர்ஷியா பானு என்பவருக்கும் பாம்பே படம் ஸ்டைலில் காதல் மலர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் காதல் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வளர்ந்திருக்கிறது.

இந்த நிலையில் எப்படியோ இவர்களது மதம் மாறிய காதல் குடும்பத்தினருக்குத் தெரியவர, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குடும்பத்தினர் ஆதரவுடன் வாழ்வில் ஒன்றுசேர முடியாது என கருதிய காதல் ஜோடி குன்னத்தூரில் இந்து முறைப்படி பிள்ளையார் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து மணமகள் குடும்பத்தினர் கடும் ஆத்திரம் அடைந்தனர்.

மணமக்களை தேடிக் கண்டுபிடிக்கவும், ஹர்ஷியா பானுவை பிரித்துச் செல்லவும், ஹர்ஷியாவின் பெற்றோரும் உறவினர்களும் தீவிரமாக அலைவதைக் கண்டு பயந்துபோன மணமக்கள் இருவரும் கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தனர்.

காவல் துறை அலுவலகத்தில், ‘நான் என்னுடைய முழு விருப்பத்தின் பேரில் விஜயை காதலித்து திருமணம் செய்திருக்கிறேன், என் பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும்’ என்று மனு கொடுத்திருக்கிறார்.  

பெற்றோரை அழைத்து எச்சரிப்பதுடன் நின்றுவிடாமல், அசம்பாவிதம் எதுவும் நிகழாவண்ணம் காவல்துறை கண்காணிக்க வேண்டும்.