வரம்பு மீறுபவர்களை அடித்து தூக்கும் எமதர்மராஜா..! வைரல் புகைப்படங்கள்! எங்கு தெரியுமா?

மும்பை: ரயில்வே தண்டவாளத்தில் நடப்பவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதிய விழிப்புணர்வு பணியை ஒருவர் மேற்கொண்டுள்ளார்.


ரயில் நிலையம் மற்றும் ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகளில் விழிப்புணர்வு இன்றி கடக்க முயன்று ரயிலில் அடிபடுவோர் ஏராளமாக இந்தியாவில் உள்ளனர். அத்தகைய நபர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மும்பை மேற்கு ரயில்வே போலீசார் சார்பாக, ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

இதன்படி, போலீசார் சார்பாக, ஒருவர் எமதர்ம ராஜா போல வேடமணிந்துகொண்டார். பிறகு மும்பை ரயில் நிலையத்தில் சிக்னல் போட்ட பிறகும் கவனிக்காமல் ஓடிச் சென்று ரயில் ஏறுபவர்கள், தண்டவாளத்தை கடக்க முயற்சிப்பவர்கள் என பலரையும் அவர் அப்படியே அலேக்காக தோளில் தூக்கிச் சென்று மறுபுறம் இறக்கிவிடுவார்.  

சாலைகளில் வாகனங்கள் பற்றி விழிப்புணர்வு கொண்டிருப்பதுபோல, ரயில் பாதையில் ரயில் பற்றிய விழிப்புணர்வு இருக்க வேண்டும். இல்லை எனில், எமதர்ம ராஜா உங்களை தூக்கிச் சென்றுவிடுவார், என இதனை பார்த்த பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். இதற்கிடையே, மும்பை ரயில்வே போலீசாரின் இந்த வித்தியாசமான விழிப்புணர் நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள், வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படுவதோடு, பாராட்டுகளும் குவிய தொடங்கியுள்ளன.