ராஜேஸ்வரியை மட்டுமா முகிலன் ஏமாற்றினார்! சமூக ஆர்வலர்கள் அத்தனை பேரையும் ஏமாற்றிவிட்டார்!

முகிலன் காணாமல் போனதும் சமூக ஆர்வலர்கள் அத்தனை பேரையும் ஏமாற்றிவிட்டார் என்று வருத்தப்பட்டு கடிதம் எழுதியிருக்கிறார் சாவித்திரி கண்ணன்.


அவர் எழுதியிருக்கும் செய்தி இதுதான். இனிய சுபாவம், அநீதியை எதிர்த்துப் போராடும் அடங்கா குணம், பொருளியல் நாட்டமின்மை..அகியவை தமிழகமே அறிந்த அவரது சிறப்புகளாகும். இதனால் தான் அவர் காணாமல் போனதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் துடிதுடித்தோம். சமூகவலைத் தளங்களில் மட்டுமின்றி வீதியில் இறங்கி குரல் கொடுத்தோம்.

ஆனால், இன்று நான் நன்கு தீர விசாரித்து அறிந்த வகையில் முகிலன் யாராலும் கடத்தப்படவில்லை..என உறுதி செய்த பின்பு இதை பேசாமல் மவுனிப்பதோ, அல்லது முட்டுக் கொடுத்து வியாக்கியானம் செய்து கொண்டிருப்பதோ அது நமக்கு நாமே வெட்டிக் கொள்ளும் சவக்குழியாகிவிடும் எனக் கருதுகிறேன்.

முகிலன் காணாமல் போன இந்த மூன்றரை மாதத்தில் அவருக்கு என்னைப் போன்ற பலர் சமூக வலைதளத்தில் எழுதிய பதிவுகளும், நம்மில் பலர் வீதியில் இறங்கி நடத்திய ஆர்ப்பாட்டங்களுமே பிறகு வெகுஜன ஊடகங்கள் இந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்கக் காரணமாயிற்று. அவருக்கு கொடுக்கபட்ட முக்கியத்துவத்தின் பின்னணியில் அவரது முப்பதாண்டு உழைப்பு நம்முள் உருவாக்கியிருந்த தாக்கங்களே காரணம்! ஆனால் அதை அவர் சாதகமாக எடுத்துக் கொண்டு தனது தவறுகளை மறைத்துக் கொள்ளும் கவசமாக பயன்படுத்திவிடமுடியாது.

அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை விடவும் அவர் தானே தன்னை மறைத்துக் கொண்டு ஒட்டுமொத்த சமூகத்தையும், அரசையும், நிதிமன்றத்தையும் ஏமாற்றிவிடத் துணிந்தது தான் மிகப் பெரிய அதிர்ச்சியைத் தருகிறது. உண்மையில் இந்த மோசடியை நாம் விவாதிக்காமல் திசை திருப்பும் வண்ணம் பாலியல் குற்றச்சாட்டு அவருக்கு அனுதாபத்தை உருவாக்கித் தந்துவிட்டது என்பது தான் கவனத்திற்குரியது.

பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு வெளிப்படைத் தன்மை தேவையில்லை, தனது செயல்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லை என்று நினைத்து விட்டால், இன்று கிடைத்துக் கொண்டிருக்கும் மக்களின் சொற்ப ஆதரவும், இனிவரும் காலங்களில் கிடைக்காமல் போவதற்கே அது வழிவகை செய்யும். அவரது சொந்த வாழ்க்கையை பற்றி நாம் பேசக் கூடாது. அவரது பொது வாழ்க்கையை மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்வோம் என்றால், இது நாள் வரையிலான அவர் மீதான நம் ஈர்ப்புக்கு காரணமே அவரது சொந்த வாழ்க்கையில் அவர் கடைபிடித்த எளிமையும், நேர்மையும் தானே!

அதனால் தானே அவர் சொந்த சம்பாத்தியமில்லாமல் நண்பர்களின் தயவில் நடமாட முடிந்தது. சொந்த சம்பாத்தியமென்று எதுவுமில்லாமல் ஒரு மனிதன் கால் நூற்றாண்டுகளாக தமிழகத்தின் குறுக்கும், நெடுக்குமாக அலைய முடிவதும், எந்த ஊரில் இறங்கினாலும் தங்கிச் சாப்பிட்டுச் செல்லமுடிவதும் சொந்த வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்புகளையும் வைத்துக் கொள்ளாதிருந்த அவரது உள்ளத் தூய்மையன்றி வேறல்ல!

இதையெல்லாம் விட அவரது சம்பாத்தியத்தை எதிர்பார்க்காமல்,குடும்பப் பொறுப்புகளை தன் தோளில் மட்டுமே சுமந்து கொண்ட அவரது மனைவியின் உன்னத தியாகம்தான்! 

நாம் இது வரை முகிலனுக்குத் தந்த மரியாதை என்பது அவரது மனைவிக்குமானதுதான்! இப்படியிருக்க, ஒரு பொது மனிதனை சொந்த வாழ்க்கையிலிருந்து எப்படி பிரித்துப் பார்ப்பது? ஒரு ஆணும்,பெண்ணும் எந்த நிபந்தனையுமற்று விரும்பி காமத்தை பகிர்ந்து கொண்டால்,அதில் மற்றவர்கள் தலையிடப் போவதில்லை. ஆனால், ஒரு பெண்ணை நம்ப வைத்து தொடர்ந்து பாலியலுக்கு இஷ்டப்படி பயன்படுத்துவது நம்பிக்கை துரோகமாகிறது.

யோசித்துப் பார்க்கிறேன்; முகிலனிடம் இளமை தொலைந்துவிட்டது. தனக்கான உணவு மற்றும் அடிப்படை தேவையை நிறைவேற்றி கொள்ளும் திராணி கூட இல்லாதவர். எல்லாவற்றுக்கும் மேல் ஏற்கனவே திருமணமானவர். அவரிடம் இசை ராஜேஸ்வரிக்கு என்ன ஈர்ப்பு ஏற்பட்டிருக்க முடியும்?

புரட்சியாளன், கொள்கைவாதி, பலராலும் அறியப்பட்ட பொதுநலவாதிஞ். இவை தானே! இதற்காகத் தான் ஈர்க்கப்பட்டு முகிலனின் கட்டளைகளை எல்லாம் சிரமேற்கொண்டு செய்தார். குடும்பத்திலிருந்து முகிலன் விலகி நிற்கும் தோற்றமும், அவரது தொண்டுக்கு வாழ்நாளெல்லாம் தான் நிழல் போல் நின்று துணை செய்ய வேண்டும் என்ற ஆவலும் தானே காரணம்!

இங்கு தான் முன்பு கவிஞர் தாமரை என்னிடம் கண்ணீர் மல்க கூறியது நினைவுக்கு வருகிறது.. ’’கண்ணன்.. தியாகுவிடம் நான் எப்படி வீழ்த்தப்பட்டேன்.! பணமா? அது அவரிடம் இல்லாதது எனக்கு ஒரு பொருட்டல்ல, இளமையா ? அழகா? அதற்கெல்லாம் மயங்கும் பெண்ணாக இருந்தால் தியாகுவை நான் எப்படி விரும்பி இருக்க முடியும்?

முக்கியமானது என்னவென்றால் கொள்கை ஈர்ப்பு! புரட்சியாளன், பொதுநலவாதி, தன் குடும்பதாலேயே அங்கீகரிகப்படாமல் விடப்பட்டவன். நாம் துணை நிற்போமே..என்ற எண்ணங்கள் தானே..!’’  ஆக, தாமரைக்கும், இசை ராஜேஸ்வரிக்கும் உள்ள ஒற்றுமை இருவருமே கொள்கை ஈர்ப்பால் கொள்ளை போனவர்கள் என்பதுதானே..! இப்படியான ஆதரவை துஷ்ப்பிரயோகம் செய்யலாமா?

முகிலன் இசை ராஜேஸ்வரியை மட்டுமா ஏமாற்றினார்? அவர் மீது அக்கறை கொண்டு, ‘’ஐயோ அவர் கொல்லப்பட்டுவிட்டாரோ.. பாவிகள் அவரை எங்கே மறைத்து வைத்து எப்படியெப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறர்களோ..’’ என்று அவர் மீதுள்ள அன்பால் 141 நாட்களாக மனம் வெதும்மிக் கிடந்த நம்மை போன்ற ஆயிரக்கணக்கானவர்களையும் சேர்த்து அல்லவா ஏமாற்றிவிட்டார்.