முதல்வருக்கு முதற்’கண்’ நன்றி ட்விட்டரில் வைரலாகும் ஹேஷ்டேக்!

முதல்வருக்கு முதற்’கண்’ நன்றி என்று ட்விட்டரில் பதிவான இந்த ஹேஷ்டேக், தமிழக அளவில் முதலிடம் பெற்று டிரெண்டிங் ஆகியிருக்கிறது. அத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மனிதநேயத்தை பல்வேறு தரப்பிலும் பறைசாற்றியுமிருக்கிறது.


கண்தானம் பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதை எப்படி செய்ய வேண்டும், இதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது பற்றி யாருக்கும் தெரியாது. 

இந்த குறைபாட்டைப் போக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில், கண்தானம் செய்ய விரும்புபவர்களுக்கு உதவிடும் நோக்கத்தோடு http://hmis.tn.gov.in/eye-donor என்ற இணையதளத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தொடங்கிவைத்தார்.

இந்த இணையதளத்தில் கண் தானம் செய்வது தொடர்பான வழிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கண்தானம் செய்பவர்கள், தானம் பெறுபவர்கள் என பலரும் பயன்பெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இணையதளத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வின்போதுதான் முதல்வர் எடப்பாடி திடீர் இன்ப அதிர்ச்சியாக அவருடைய கண்களைத் தானம் செய்வதாக தெரிவித்ததுடன், அதற்கான உறுதிமொழி சான்றிதழை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.

மக்களிடையே கண் தானத்தை ஊக்குவிக்கும் வகையில், முதல்வர் முன்னுதாரணமாக தனது கண்களை தானம் செய்துள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமியின் இந்த மனிதநேய செயலுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக பல்வேறு தரப்பினரும் டுவிட்டர் பக்கத்தில் #முதல்வருக்குமுதற்கண்நன்றி என்ற ஹேஷ்டாக்கை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது.

அது மட்டுமல்ல, பிறருக்கு நன்மை செய்ய வேண்டும், என்கிற உயர்ந்த நோக்கோடு தனது கண்களை தானம் செய்துள்ள முதல்வர் பழனிசாமி வழியில் நானும் எனது இருவிழிகளையும் தானம் செய்துள்ளேன் என்று பலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கண் தானம் செய்த சான்றிதழைப் பதிவிட்டும் வருகின்றனர்.