கள்ள காதலனுக்காக மகனை கொலை செய்தது எப்படி? பெற்ற தாய் கொடுத்த பகீர் வாக்குமூலம்

சென்னை அம்பத்தூரில் தவறான நட்புக்காக மூன்றரை வயது மகனை கொன்ற தாயும், தாயின் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருவாரூரைச் சேர்ந்த கார்த்திகேயன் சென்னை அம்பத்தூரில் குடியிருந்து பெயின்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் ஈரோடு, பெருந்துறையைச் சேர்ந்த சமூக சேவகி புஷ்பாவின் மகள் புவனேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டதையடுத்து, அவர்கள் புவனேஸ்வரியின் மூன்றரை வயது மகன் கிஷோருடன் அம்பட்தூரில் வாடகை வீட்டில் கணவன் மனைவி போல வசித்து வந்தனர். 

புவனேஸ்வரியின் முதல் கணவன்  சோமசுந்தரம் குடிபழக்கமுடையவர் என்றும் அதனால் புவனேஸவரியை தினமும் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தாய் புஷ்பாவுடன் சென்னை போரூரில் நடந்த்ஹ பெண்கள் பாதுகாப்பு மாநாட்டுக்கு வந்த புவனேஸ்வரிக்கு கார்த்திகேயனுடன் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்தாலே கிஷோர் அடம் பிடித்து அழத் தொடங்கியதாகக் கூறும் புவனேஸ்வரி, முதல் திருமணத்தின் கசப்பான அனுபவங்களில் இருந்து தப்ப கார்த்திகேயனுடன் சென்னை வந்த நிலையில் இந்த வாழ்கையிலும் கிஷோரால் நிம்மதி குலைந்ததால் மகன் மீது வெறுப்பு அதிகரிக்கத்தொடங்கியதாகக் கூறுகிறார். 

சம்பவத்தன்று கிஷோரை தோசைக் கரண்டியால் அடித்ததாகவும், அதனால்  வீட்டிலிருந்து வெளியில் ஓடிவந்த கிஷோர் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில் வலது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் போலீசாரிடம் புகார் அளித்தால்தான் சிகிச்சை அளிக்கப்படும் என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டதால் சிகிச்சை அளிக்காமலேயே எடுத்து வந்ததாகவும், இந்நிலையில் கிஷோர் இறந்துவிட்டதாகவும் புவனேஸ்வரி கூறுகிறார். 

இதையடுத்து யாருக்கும் தெரியாமல் சடலத்தை புதைக்கும் திட்டத்துடன் தானும் கார்த்திகேயனும் திருவாரூருக்கு புறப்பட்டுச் சென்றதாகவும், மகன் இறப்பு குறித்து தனது தாய் புஷ்பாவுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்ததாகவும் புவனேஸ்வரி கூறுகிறார். 

இதையடுத்து புஷ்பா அம்பத்தூர், பட்டுக்கோட்டை, திரூவாரூர் காவல் நிலையங்களுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தையடுத்து திருவாரூர் மயானத்தில் புவனேஸ்வரியையும், கார்த்திகேயனையும் குழந்தையின் சடலத்துடன் போலீசார் கைது செய்தனர். கார்த்திகேயனும் புவனேஸ்வரியும் தங்கியிருந்த வீட்டின் அருகில் விசாரித்தபோது தினமும் கிஷோரை இருவரும் சேர்ந்து அடிப்பார்கள் என்று அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். பிணவறையின் அருகில் கூட புவனேஸ்வரியின் தாயார் புஷ்பாதான் கண்ணீருடன் அமர்ந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.