பட்ஜெட்டில் விவசாயிகளை ஏமாத்திட்டாங்களா..? விவசாய பட்ஜெட் என்று மோடி சொன்னதும் பொய்தானா?

அடுத்த ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்தியே தீருவோம் என்பதற்கான பட்ஜெட் என்று அறிவித்து மோடி பெருமைப்பட்டுக்கொள்வதற்குள், வரும் 13ம் தேதி விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறது விவசாயிகள் சங்கம்.


ஆம், இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை இது. மத்திய பாஜக அரசு 2022க்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்றனர். ஆனால் மத்திய அரசின் கொள்கைளால் விவசாயிகளின் விலை பொருடகளுக்கு கட்டுபடியாகிற விலை கிடைக்காமல் தொடர்ந்து விவசாயத்தில் நட்டமடைந்து கடன்காரர்களாக மாறி வருகின்றனர். பா.ஜ.க ஆட்சியில் விவசாய தற்கொலைகள் அதிகரித்து வருகிறது.  

எம்.எஸ்.சாமிநாதன் கமிட்டி சிபாரிசுபடி விலை நிர்ணயித்திட வேண்டும், விவசாயிகள் கடனை ஒருமுறை தள்ளுபடி செய்து அவர்களை கடன் வலையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்ற அனைத்து விவசாய சங்கங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. மாறாக உரமானியம், நீர்பாசனம், கிராமப்புற வளர்ச்சிக்கான ஒதுக்கீடுகள் பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளன. உரத்துக்கான மானியத்தை 77,886 கோடியிலிருந்து ரூ.70139 கோடியாக குறைத்துள்ளனர். உதாரணத்திற்கு இந்திய உணவுக்கழகம் மற்றும் பொதுவிநியோக நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட நிதி 1,51,000 லட்சம் கோடியிலிருந்து ரூ.75000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி குறைப்பு வேளாண் விளை பொருள் அரசு கொள்முதல் செய்வதை கடுமையாக பாதிக்கும்.  

உற்பத்தி செலவை மேலும் உயர்த்தும், உணவு மானியத்தை குறைத்துவிட்டனர். நிலத்தை குத்தகைக்கு விட்டுவிடுவது, ஒப்பந்த முறை விவசாயத்தை மாநில அரசுகள் சட்டமாக்கிட வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். இதன் மூலம் சிறு, குறு மற்றும் ஏழை விவசாயிகளின் நிலங்களை பெரும் விவசாயிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிக் கொள்ள மத்திய பட்ஜெட் கதவை திறந்துவிட்டுள்ளது.

வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில் கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு இந்த நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட செலவுத் தொகை ரூ.71000 கோடி. ஆனால் நிதி ஒதுக்கியிருப்பது ரூ.61500 கோடி மட்டுமே. ஒதுக்கீட்டை குறைத்து திட்டத்தை பலவீனப்படுத்துகின்றனர். மத்திய அரசின் பட்ஜெட் துயருற்றிருக்கும் விவசாயிகளை பாதுகாப்பதற்கு பதிலாக விவசாயிகள், விவசாய தொழிலாளர்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் விவசாய விரோத பட்ஜெட்டாகும். மத்திய பா.ஜ.க அரசின் விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்திட அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் வாய்ப்புள்ள அனைத்து தாலுக்காக்களிலும், மாவட்ட தலைநகரிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட அமைப்புகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.