எடப்பாடி இதுவரை கேட்ட எதுவும் மோடி கொடுக்கவில்லை என்றாலும், மன உறுதியை இழக்காமல் கேட்கிறாரே!

கொரோனா காலத்தில் முதல் அமைச்சர்களை வீடியோ கான்பரன்சிங் முறையில் மோடி சந்திப்பதும், அவர்களிடம் நிதி கேட்டு முதல்வர்கள் கெஞ்சுவதும் வழக்கமாக நடக்கும் விவகாரம்தான். அந்த வகையில், நேற்றும் இன்றும் முதல்வர்கள் மாநாட்டை மோடி நடத்தி வருகிறார்.


இன்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி மாநில முதலமைச்சர்களுடன் 2-வது நாளாக பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டு, கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினர்.

தமிழகம் சார்பில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘மருத்துவ உபகரணங்களை வாங்குவதற்காக ரூ.3000 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்’ என்று பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார். அதேபோன்று மார்ச் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்றும், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1000 கோடி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும், தமிழக தொழில் முதலீட்டு கழகத்துக்கு மறு நிதியுதவி திட்டம் கீழ் ரூ.1000 கோடி வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். இவற்றை எல்லாம் மோடி கேட்டுக்கொண்டாரே தவிர, எந்த உறுதிமொழியும் வழங்கவில்லை.

எடப்பாடி இதுவரை கேட்டு எதுவும் கொடுக்கப்படவில்லை என்றாலும், மன உறுதியை இழக்காமல் கேட்கிறாரே என்று சந்தோஷப்பட வேண்டியதுதான்.