ராஜேந்திரபாலாஜியின் மந்திரி பதவி பறிபோகுமா? மோடிக்குப் பயந்து வேடிக்கை பார்ப்பாரா எடப்பாடி?

வாய்ச்சவடால் அமைச்சர்கள் இப்போது தமிழகத்தில்தான் மிகவும் அதிகம். ஆளாளுக்கு ஒன்று பேசுவதும், செய்வதுமாக இருக்கிறார்கள். சமீபத்தில் பெரியாரை ரஜினி சீண்டியதும் அத்தனை அமைச்சர்களும் சொல்லி வைத்தாற்போல் ரஜினி மீது விமர்சனம் வைத்தார்கள்.


ஆனால், ராஜேந்திரபாலாஜி மட்டும் தனி ரூட்டில் போனார். ரஜினி மீது எந்தத் தவறும் இல்லை என்று பா.ஜ.க.வின் பார்வை பார்த்தார். அவரது பேச்சை கட்டுப்படுத்த முடியாமல் அமைதியாக இருந்தார் எடப்பாடி. 

இந்த நிலையில் இன்று, சசிகலாவுக்காக உருகியிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. ஜெயலலிதாவுக்கு உயிராகவும் உடலாகவும் 30 ஆண்டுகள் இருந்த சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

சசிகலா குறித்துப் பேசுவதற்கு அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு எழுதப்படாத தடை போடப்பட்டுள்ளது. அவர் வெளியே வரும் வரையிலும் யாரும் எதுவும் பேச வேண்டாம் என்று சொல்லப்பட்ட நிலையில், தலைமையை மீறி பேசியிருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.

மோடி எங்கள் டாடி என்று சொல்லி பா.ஜ.க.வின் மீது அதீத பாசமாக இருப்பவர் பாலாஜி. அதனால்தான் ரஜினி, சசிகலா என்று பல்டி அடித்துவருகிறார். இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி ஆட்கள் துடிக்கிறார்கள். ஆனால், மோடியை நினைத்து அச்சப்படுகிறார் எடப்பாடி.

என்ன செய்யப்போகிறார்..?