பா.ஜ.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப் போகிறோம்.? தில்லு அமைச்சர் பாஸ்கரனுக்கு குவியும் பாராட்டு!

அ.தி.மு.க. அமைச்சரவையில் பாஸ்கரன் என்று ஓர் அமைச்சர் இருக்கிறார் என்பதே நேற்றுத்தான் பலருக்கு தெரியவே வந்தது. ஆம், பா.ஜ.க. கூட்டணி குறித்து அவர் சொன்ன கருத்து அ.தி.மு.க.வில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.


குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவிக்க வேண்டிய சூழலில் இருந்தது. அதற்காக மக்களிடம் கடுமையான எதிர்ப்பையும் சம்பாதித்தது. அன்வர் ராஜா, நிலோபர் கபில் போன்றவர்கள் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்று சொல்லிவந்தாலும், மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில்தான், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் எம்.ஜி.ஆரின் 103ஆவது பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசினார் கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன். அப்போது அவர், “இப்போது நாங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். ஆனால்,. எந்த நேரம் வேண்டுமானாலும் நாங்கள் தனியாகச் செல்வதற்கு வாய்ப்புள்ளது. அந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறோம். எங்களது அமைச்சரவையில் பெருமபாலான அமைச்சர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பாகத்தான் இருக்கிறார்கள்’’ என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் பாஸ்கரன் கருத்துக்கு அ.தி.மு.க.வில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறதாம். வெளிப்படையாக பேசியதற்கு நன்றி என்று பலரும் கூறியிருக்கும் நிலையில், அமைச்சர் ஜெயகுமார் மட்டும், ‘பாஸ்கரன் கூட்டணி பற்றி கூறியது, அவரது சொந்தக் கருத்து’ என்று கூறியிருக்கிறார்.

எப்படியோ, பாஸ்கரனும் பரபரப்பாகிட்டார்.