புரட்சித்தலைவருக்கு தி.மு.க.வில் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டதும், பொறுக்க முடியாமல், வெளிப்படையாக நியாயம் கேட்கத் தொடங்கினார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
கருணாநிதியை எதிர்த்து கேள்வி கேட்ட புரட்சித்தலைவர். என்ன பேசினார் தெரியுமா?
1972ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 8-ம் தேதி திருக்கழுக்குன்றம் கூட்டத்தில் பேசிய புரட்சித்தலைவர், ‘’தி.முக. கட்சி நிர்வாகிகள் ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எதிர்க் கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி தரும் வகையில், திமுகவின் கிளைக்கழகச் செயலாளர்கள் தொடங்கி, அமைச்சர்கள் வரை தங்கள் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும்' என்று முழங்கினார்.
அடுத்து பேசிய லாயிட்ஸ் ரோடு கூட்டத்தில், ‘நான்தான் திமுக, திமுகதான் நான்’ என்றும் பிரகடனம் செய்தார். புரட்சித்தலைவரின் பிரகடனத்தை கலைஞர் கருணாநிதியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதற்காகவே காத்திருந்தது போன்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அவசரம் அவசரமாக செயற்குழு, பொதுக்குழுவைக் கூட்டி, கட்சியின் கட்டுப்பாட்டுக்கு ஊறு விளைவிப்பதாக அக்டோபர் 10 -ம் தேதி திமுகவில் இருந்து புரட்சித்தலைவரை நீக்கினார்.
அப்போது, ‘’அண்ணா ஒப்படைத்துவிட்டுச்சென்ற கனியில் வண்டு துளைத்துவிட்டது. அதனால் வேறு வழியின்றி கனியை எறிய வேண்டியதானது’’ என்று விளக்கம் கொடுத்தார் கலைஞர் கருணாநிதி. அப்போது, ‘மத்திய அரசின் வருமானவரித் துறை நடவடிக்கைக்குப் பயந்து திமுகவை காட்டிக்கொடுத்து விட்டார் புரட்சித்தலைவர்’ என்று பொய்யாக ஆட்சியாளர்களால் கட்டுக்கதை பரப்பப்பட்டது. உண்மையில் புரட்சித்தலைவர் யாரைக்கண்டும், எதற்காகவும் அச்சப்படுபவர் அல்ல.
புரட்சித்தலைவரின் செல்வாக்கைக் கண்டு திமுக தலைவர்கள்தான் பயந்தார்கள். அதனால் அவருக்கு மறைமுக நெருக்கடி கொடுத்தார்கள். தன்னை நம்ப வைத்து கழுத்தை அறுக்கிறார்கள் என்பதை எம்.ஜி.ஆர். உணர்ந்தபிறகே விஸ்வரூபம் எடுத்தார். எம்.ஜி.ஆரை வெளியேற்றிய கருணாநிதி அதற்கான விலையைக் கொடுக்கவேண்டி இருந்தது. ஆம், அதன்பிறகு எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்த வரையிலும் அவரால் பதவிக்கு வரவே முடியவே இல்லை.