பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர்!

தி.மு.க.வில் ஏராளமான பேச்சாளர்கள் இருந்தாலும், நாடெங்கும் தி.மு.க. கொள்கைகளைக் கொண்டுசெல்ல புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் மட்டுமே முடியும் என்று நம்பியர் அண்ணா.


அதற்கான அத்தனை வாசலையும் மனமார திறந்து வைத்தார். திமுக மாநாடுகளில் எல்லாம் புரட்சித்தலைவர் நடித்த, ‘இன்பக்கனவு’ நாடகம் தவறாமல் இடம்பிடித்தது. இதன் எதிரொலியாக 1962-ம் ஆண்டு தேர்தலில் திமுக 50 இடங்களில் வெற்றி பெற்றது.

இதற்கு புரட்சித்தலைவரின் தேர்தல் பரப்புரைதான் அதிகம் உதவியது என்று அண்ணா வெளிப்படையாகவே பேசினார். அவர் புரட்சித்தலைவரின் புகழை கட்சிக்கு ஆதாரமாகவே எடுத்துக்கொண்டார்.

ஒரு முறை அண்ணா பரப்புரை முடித்து காரில் திரும்பியபோது, சாலையோர தேநீர் கடையில் நிறுத்தினார். சாலையில் சென்ற விவசாயக் கூலித் தொழிலாளர்கள் சிலர், அண்ணாவின் காரில் கட்டியிருந்த கொடியைப் பார்த்ததும், ‘’நீங்கள் எம்.ஜி.ஆர். கட்சியா?’’ என்று ஆர்வமுடன் கேட்டார்கள். அதற்கு அண்ணாவும் பெருந்தன்மையுடன், ‘’எம்.ஜி.ஆர். கட்சிதான்’’ என்று பதில் சொல்லி அனுப்பிவைத்தார்.

இந்த சம்பவத்தை அடுத்த நாள் தம்பிக்கு எழுதிய கடிதத்தில், ‘’நாம் சந்திக்காத மனிதர்களிடமும் பாமர மக்களிடமும் எம்.ஜி.ஆர். நம் கொடியை கொண்டுபோய் சேர்த்திருக்கிறார்’’ என்று மகிழ்வுடன் எழுதினார் அண்ணா. 

1958-ம் ஆண்டு பொதுமேடையில் அண்ணா, ‘’ஒரு மரத்தில் பழம் பழுத்து தொங்கிக்கொண்டிருந்தது. அது தங்கள் மடியில் விழாதா என பலரும் காத்திருந்தனர். அது என் மடியில் விழுந்தது. அதை எடுத்து என் இதயத்தில் பத்திரப்படுத்திக் கொண்டேன். அந்தக் கனிதான் எம்.ஜி.ஆர். எனும் என் இதயக்கனி’’ என்று பேசினார். புரட்சித்தலைவரின் புகழை மறைக்கவும் மறக்கவும் அண்ணா ஒருபோதும் விரும்பியதில்லை.