உலக அழகி பட்டம் வென்றார் வனஸ்சா! இவர் யார் தெரியுமா?

2018ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்றுள்ள மெக்சிக்கோவின் வனஸ்சா போன்ஸ் டி லியோன் ஒரு ஆசிரியை என்பது தெரியவந்துள்ளது.


சீனாவின் சன்யா நகரில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் 118 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கு பெற்றனர். நீச்சல் உடை, பூணை நடை, அறிவுடன் கூடிய அழகு என அனைத்து சுற்றுகளிலும் அதிக புள்ளிகள் பெற்று மெக்சிக்கோவின் வனஸ்சா உலக அழகி பட்டத்தை வென்றார். அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவின் மனுசி சில்லர் க்ரீடத்தை சூட்டினார்.



   உலக அழகி பட்டம் வென்றுள்ள வனஸ்சாவுக்கு 26 வயது ஆகிறது. மெக்சிக்கோவின் குவான்ஜூவாட்டோ நகரை சேர்ந்த வனஸ்சா அங்குள்ள பல்கலைக்கழகத்தில் சர்வதேச வர்த்தகம் எனும் பாடப்பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். மேலும் மனிதவளத்துறையில் பட்டயப் படிப்பையும் வனஸ்சா நிறைவு செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக வனஸ்சா மாடலிங் தொழிலில் ஈடுபட்டு இருந்தார்.

   ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாடலிங் தொழிலுக்கு முழுக்கு போட்டுவிட்டு  மாற்றுத்திறனாளி பெண்களுக்கு கல்வி கற்பிக்கும் வேலையில் இறங்கியுள்ளார் வனஸ்சா. ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளில் வனஸ்சா புலமை பெற்றவர். இவருக்கு வாலி பால் விளையாடுவது மிகவும் பிடிக்கும். கடலில் ஸ்கூபா டைவிங் செல்வதற்கும் வனஸ்சா மிகவும் ஆசைப்படுவாராம்.



  தற்போது நெனமி என்று அழைக்கப்படும் பள்ளியில் பழங்குடியின சிறுமிகளுக்கு கல்வி கற்றுக் கொடுக்கும் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டே உலக அழகிப்போட்டியில் பங்கேற்று வென்றுள்ளார் வனஸ்சா. உலக அழகிப் போட்டியில் இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கு அழகிகள் அளிக்கும் பதில் தான் அவர்களுக்கு பட்டத்தை பெற்றுத்தரும். அந்த வகையில் இறுதிக்கேள்விக்கு வனஸ்சா அளித்த பதில் பின்வருமாறு:-

   எப்போதும் ஒரு நோக்கத்தை தேடிக் கொண்டிருக்கும் பெண் நான். எனக்கு அன்பு, கலை மற்றும் மற்றவர்கள் மீது பரிவு காட்டுவதில் அதிக நம்பிக்கை உண்டு. நான் மிகவும் கடுமையாக உழைக்க கூடியவள். அதே சமயம் அதிகம் பகல் கனவு காண்பவளும் கூட. எப்போதுமே நான் சந்திக்க கூடிய மனிதர்களின் முகத்தில் சிரிப்பு இருக்க வேண்டும் என்று நினைப்பவள். பல ஆண்டுகளாக மாடலிங் செய்து வந்தேன். ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாடலிங்கை நிறுத்திக் கொண்டேன்.

   தற்போது பழங்குடியின சிறுமிகளுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருகிறேன். உலகில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு நாளாவாது தன்னார்வலாகி ஏதேனும் ஒரு சேவை செய்ய வேண்டும். இவ்வாறு வனஸ்சா கூறியதும் அரங்கமே கைதட்டில் அதிர்ந்தது. அந்த கைதட்டே வனஸ்சாவுக்கு உலக அழகி பட்டத்தை வென்று கொடுத்தது.