துண்டான கை கட்டை விரலுக்கு பதில் கால் கட்டை விரலை பொருத்திய டாக்டர்கள்! காதலியால் இளைஞனுக்கு நேர்ந்த நிலை!

மிக்சிகன்: காதலிக்கு பரிசு தயாரித்தபோது எதிர்பாராவிதமாக இளைஞர் ஒருவர் தனது கைவிரலை வெட்டிக் கொண்டார்.


அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள கார்சான் நகரத்தைச் சேர்ந்தவர் எய்டன் ஆட்கின்ஸ். இவர் தனது காதலியை  ஆச்சரியப்படுத்துவதற்காக, மரத்திலான பரிசு ஒன்றை செய்தார். இந்த பணியின்போது, எதிர்பாராவிதமாக தனது கை கட்டை விரலை அறுத்துக் கொண்டுவிட்டார்.

உடனடியாக, அறுபட்ட விரலை எடுத்துக் கொண்டு, மருத்துவரிடம் சென்ற ஆட்கின்ஸ்க்கு, கட்டை விரலை மீண்டும் பொருத்த மருத்துவர்கள் முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. இருந்தாலும், இடது கை என்பதால், கட்டை விரலை எப்படியேனும் பொருத்துவது எனும் முயற்சியில் டாக்டர்கள் ஈடுபட்டனர்.  

4 மாத போராட்டத்திற்குப் பின், டாக்டர்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்தனர். இதன்படி, ஆட்கின்ஸ் இடது காலில் உள்ள ஒரு விரலை வெட்டியெடுத்து, அதனை இடது கையின் கட்டை விரலாக பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஆட்கின்ஸ் மகிழ்ச்சியுடன் ஒப்புதல் தெரிவிக்க, அவர்கள் விரைவாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

இதன் முடிவாக, தற்போது ஆட்கின்ஸ்க்கு இடது கையில் கட்டை விரல் கிடைத்துள்ளது. இதனை அவரால் அசைக்க முடிவதாகவும், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் இத்தகைய செயல் பொதுவான நடைமுறைதான் எனவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.