மேதா பட்கர் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது, ஆனால் போராட்டம் நீடிக்கிறது!

குஜாரத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டத்தை 138.68 அடியாக உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.


இதனால், மத்திய பிரதேசத்தில் உள்ள தார், பட்வானி உள்ளிட்ட மாவட்டங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால் 192 கிராமங்களுக்கும், அதில் வசிக்கும் 32 ஆயிரம் குடும்பங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். 

மேலும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து என்பதை வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர் மேதா பட்கர், மத்தியப்பிரதேசத்தின் பர்வானி மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவருடன் பர்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமத்தினரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு சார்பில் யாரும் பேச்சுவார்த்தைக்கு முன்வராத சூழலில், மேதா பட்கர் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்துகொண்டே வந்தது. மேதா பட்கர் போராட்டத்தை கைவிடுமாறு பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர். ஆனால் மேதா பட்கர் தீர்வு கிடைக்காமல் அறப்போரை கைவிடவில்லை. தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் மேதா பட்கரின் உடல்நிலை மோசமடைந்தது.

இதையடுத்து மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு பேச்சுவார்த்தைக்கு இறங்கிவந்தது. முன்னாள் தலைமைச் செயலாளர் எஸ் சி பெஹர் அவர்களை மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் மேதா பட்கரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட அனுப்பினார். 

சர்தார் சரோவர் திட்டத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு குறித்து புதிய நடைமுறை மேற்கொள்ளப்படும் என்றும் பதிக்கப்படும் 115 குடும்பங்களுக்கு தலா 60 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.

மேலும், குஜராத்தின் முடிவை மத்திய பிரதேச அரசு எதிர்ப்பதாகவும் கூறப்பட்டது. இதுதவிர, மக்கள் கோரிக்கைகளை ஆராய நர்மதா பள்ளத்தாக்கின் கிராமங்களில் முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கமல் நாத் கொடுத்திருக்கும் உறுதியை பெஹர் நேரில் விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து, மேதா பட்கர் தனது உண்ணாவிரததை முடித்துக்கொண்டார். ஆனால், அத்தனை கோரிக்கைகளும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார். நல்ல போராளி.